தமிழகத்தில் மழை தொடர்கிறது, கடலோர பகுதிகளில் இன்று வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.  உட்புற பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழை பதிவாகி உள்ளது.  இரு தினங்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பலத்த மழை காரணமாக நகரின் சில பகுதிகளில் வெள்ளம்போல் மழை நீர் ஓடியது.  இதே போல் மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.  தென்மேற்கு பருவ மழை துவங்கியது முதல் இந்த பகுதிகளில் மழை சற்று குறைவாகவே பெய்து வந்த நிலையில் இந்த இரு தினங்கள் மழை விவசாயிகளுக்கு மிக உதவியாக வந்துள்ளது.

Weather_Update_1

உட்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்த போதிலும் கடலோர பகுதிகளில் மழை அதிகம் பெய்ய வில்லை.  காற்றின் திசை ஏதுவாக இல்லாததால் உட்புற பகுதிகளில் உருவாகும் இடி மேகங்கள் கரையோர பகுதிகளை அடைய வாய்ப்பு உருவாகவில்லை.  இன்று முதல் காற்றின் திசை சற்றே மாற துவங்கி கரையோர பகுதிகளில் மழைக்கான வாய்ப்பை அதிகரித்து உள்ளது.

குறிப்பாக வட கடலோர பகுதிகளில் சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதிகளில் இன்று மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.  அடுத்த ஓரிரு தினங்களுக்கு கரையோர பகுதியில் மழை வாய்ப்பு நன்கு உள்ளது என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

இன்று தென் ஆந்திர மற்றும் வட தமிழகத்தின் உட்புற பகுதிகளில் வளிமண்டலத்தில் காற்றின் நிலையற்ற தன்மை சற்று அதிகமாக இருப்பதால் வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் பலத்த இடி மழை உருவாக வாய்ப்பு உள்ளது