தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு பரவலாக வறண்ட வானிலை

கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது.  குறிப்பாக உட்புற பகுதிகளான கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் சில நாட்கள் பலத்த இடி மழை பதிவாகியது.  இதே போல் தென் தமிழகத்திலும் மதுரை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

சனிக்கிழமை அன்று சென்னை மற்றும் அதனை சுற்றயுள்ள பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பதிவாகியது. இந்நிலையில் நேற்று தமிழகத்தின் அனேக இடங்களில் வறண்ட வானிலை காணப்பட்டது. அடுத்த சில தினங்களுக்கு இந்த நிலை நீடிக்கக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  கடந்த ஜூலை மாதத்திலும் முற்பகுதியில் தமிழகத்தில் மழை குறைந்தே பதிவாகியது இதே போல் ஆகஸ்டு மாதத்திலும் முதல் சில தினங்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென் தமிழத்தின் சில பகுதிகளை தவிர ஏனைய தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு குறைவு.

Weather_Update_1

வட வங்க கடல் பகுதியில் நேற்று ஓர் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.  இதன் காரணமாக தென்மேற்கு பருவ மழை மீண்டும் வீரியம் அடைய கூடும்.  குறிப்பாக அடுத்த சில தினங்களில் மேற்கு கடலோர பகுதி, மத்திய இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களில் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி மேற்கு / வடமேற்காக நகர கூடும் என்ற போதிலும் வானிலை படிவங்கள் இது மெதுவாக நகரக்கூடும் என எதிர்பார்க்கின்றன.

நேற்று கொண்கன் கரையோர பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழை பதிவாகியது, மும்பையின் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் 10 செ.மீ. அளவிற்கு மழை பெய்து உள்ளது, இன்றும் இதே போல் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் எல்லையை ஒட்டிய கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது