வட தமிழகத்தில் சில இடங்களில் நேற்று மழை இன்றும் தொடர வாய்ப்பு

நேற்று வட தமிழகத்தில் சில பகுதிகளில் முன்னிரவு மற்றும் நள்ளிரவு நேரத்தில் மழை பதிவாகியது.  தமிழகத்தில் பரவலாக வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் நிலையில் இந்த மழை ஓர் நல்வரவாக இருந்தது என கொள்ளலாம். ஆனால் தென் தமிழகத்தை பொறுத்த வரை வெப்ப நிலையில் மாற்றம் ஏதும் இன்னும் வரவில்லை. திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சராசரி அளவை காட்டிலும் நான்கு அல்லது ஐந்து டிகிரி அளவிற்கு பகல் நேர வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

weather_update_1

நேற்று வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் சென்னையின் அனேக பகுதிகளில் மழை பதிவாகியது.  இன்றும் இதே போல் வட தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  நேற்று போல் இன்றும் மாலை முதல் இடி மேகம் உருவாக கூடும். முன்னிரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

நாளை முதல் தென் இந்திய தீபகற்ப பகுதியில் மழை வாய்ப்பு அதிகரிக்க துவங்கும்.  தென்மேற்கு பருவ மழை காலத்தில் இருந்து வடகிழக்கு பருவ மழை காலத்திற்கு பருவ நிலை மாற துவங்கி உள்ள நிலையில் மேலை காற்று மெதுவாக கீழை காற்றாக மாறும்.  இந்த நேரங்களில் காற்றின் திசை மாற்றம் காரணமாக சில இடங்களில் வளிமண்டலத்தில் நிலையற்ற தன்மை உருவாக வாய்ப்பு உள்ளது.  இந்த சமயங்களில் இடி மேகம் உருப்பெற்று மழை பெய்ய கூடும்.

weather_update

தென் இந்திய தீபகற்ப பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு இது போல் ஓர் நிலையற்ற தன்மை நிலவ கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன குறிப்பாக உட்புற பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.  தமிழகத்தின் மேற்கு பகுதிகள் மற்றும் ராயலசீமா, தென் கர்நாடக உட்புற பகுதிகளில் மழை பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது.