வடகிழக்கு பருவ மழை மறுமலர்ச்சி அடைய ஓர் வாய்ப்பு

இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்து பொழிந்து உள்ளது.  கடந்த 150 ஆண்டுகளில் மிக குறைந்த மழை அளவு அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரு மாதங்களில் கூடு தொகுப்பு இருக்க கூடிய நிலை உருவாகி உள்ளது.  இன்றைய நிலவரப்படி தமிழகத்தின் மழை அளவு -71%  அளவிற்கு சராசரி அளவை விட குறைந்து பதிவு ஆகியுள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை மீண்டும் தமிழகத்திற்கு மறுமலர்ச்சி அடைய ஓர் வாய்ப்பு உருவாகி வருகிறது.  பூமத்திய ரேகையை ஒட்டிய வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தென் அந்தமான் கடல் பகுதியில் கடந்த சில தினங்களாக நிலை கொண்டுள்ள காற்று அழுத்த தாழ்வு நிலை சற்றே வலுப்பெற்று காற்று அழுத்த தாழ்வு பகுதியாக அடுத்த  24 – 48 மணி நேரங்களில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

weather_update_1

இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு சற்றே மேற்கு நோக்கி நகர்ந்து பின் வடமேற்காக தமிழக கடற்கரையை ஒட்டி நகரக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. நவம்பர் 30ஆம் தேதி அன்று குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என சில வானிலை படிவங்கள் கணிக்கின்ற போதிலும் சற்று பொறுமை காப்பது உசிதம் என நாங்கள் எண்ணுகிறோம்.

எனினும் இந்த சலனம் காரணமாக வடகிழக்கு பருவ மழை மீண்டும் தமிழகத்தில் துவங்க ஓர் வாய்ப்பு உள்ளது.  தற்பொழுது காற்று வெப்ப மண்டல குவியல் பகுதி (ITCZ) தென் துருவத்தை ஒட்டியே உள்ளதால் தென் தமிழகம் மற்றும் இலங்கை பகுதிக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்க கூடும்.