வங்கக்கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம்

சென்ற வாரம் நடா புயல் உருவாகி தமிழகத்தில் சில இடங்களில் மழை கொடுத்த நிலையில் தற்பொழுது அந்தமான் அருகே மற்றொரு குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 1200 கிமீ அளவில் தற்பொழுது நிலை கொண்டுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 முதல் 24 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக மாற கூடும் என இந்திய வானிலை துறை கணிக்கின்றது.

weather_update_1

அழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் நாளை இரவுக்குள் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  அடுத்த 36 மணி நேரத்திற்கு வடக்கு வடமேற்காக இந்த தாழ்வு மண்டலம் நகரக்கூடும் என்பதிலும் வானிலை படிவங்கள் இடையே ஒத்து உள்ளது.

அதன் பின் புயல் சற்றே மேற்காக நகரக்கூடும் என்பது வானிலை படிவங்களின் கணிப்பு.  ஆனால் இதில் சில படிவங்கள் வட மேற்காக நகர்வு இருக்க கூடும் எனவும் சில படிவங்கள் முழுவதும் மேற்காக நகரக்கூடும் என ஒத்து இல்லாமல் கணிக்கின்றன. அடுத்த 36 மணி நேரத்தில் எந்த அளவிற்கு வடக்கு திசையில் இந்த சலனம் நகரக்கூடும் என்பது பொருத்து அடுத்தடுத்து நிகழக்கூடிய  பாதை மற்றும் கரையை நோக்கி நகரக்கூடிய பகுதி மாறக்கூடும் என்பதால் சற்று பொருது இருப்பதே உசிதம்.