தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரிக்கக்கூடும்

நேற்று தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் பல இடங்களில் நல்ல மழை பதிவாகியது.  குறிப்பாக ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.  குறிப்பாக ஈரோடு மாவட்டம் பவானி, அம்மாபேட்டை, பெருந்துறை ஆகிய பகுதிகளிலும் சேலம் மாவட்டம் கொங்கனாபுரம், வீரப்பாண்டி ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பதிவாகியது.  இதே போல் திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களிலும் சில இடங்களில் கோடை மழை பெய்தது.

தற்பொழது நாம் கிழகத்திய மற்றும் மேற்கத்திய காற்று மாறும் இடைப்பட்ட காலத்தில் உள்ளதால் காற்று சலனம் மற்றும் பகல் நேர வெப்பத்தின் தாக்கம் காரணமாகவும் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகி வருகிறது.  மாநிலத்தின் பரவலாக வெப்பத்தின் தாக்கம் இருக்கின்ற போதிலும் மழை சில இடங்களில் மட்டுமே பெய்வது ஏன் என்ற கேள்வி பல சமயம் நம்மில் அனைவருக்கும் தோன்றுவது இயல்பு.

வெப்ப சலனம் இருந்த போதிலும் காற்று ஓர் மிக முக்கிய காரணியாகும்.  கீழை காற்று மேலை காற்றாக மாறக்கூடிய இந்த காலத்தில் சில இடங்களில் காற்று குவிதல் காரணமாக இந்த சலனம் மழை மேகமாக மாற ஏதுவான நிலை ஏற்படுகிறது.  இந்த இடங்களிலேயே மழை வாய்ப்பு அதிகமாகும்.

இன்று தமிழகத்தில் பரவலாக வெப்ப நிலை இயல்பு அளவை விட அதிகாமாக இருக்கக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. குறிப்பாக மேற்கு / தென்மேற்கு திசையில் இருந்த வரக்கூடிய நிலக்காற்றின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை படிவங்கள் காற்றுகின்றன.  இதன் காரணமாக உட்புற பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை பரவலாக 104 / 105°ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி நிலவக்கூடும்.

கடலோர பகுதிகளிலும் கிழக்கில் இருந்து வரும் கடல்காற்று சற்று தாமதமாக வர வாய்ப்பு உள்ளதால் சென்னை போன்ற பகுதிகளில் வெப்ப நிலை 36 / 37° செல்சியஸ் வரையிலும் கடலில் இருந்து 15 கிமீ தாண்டி மீனம்பாக்கம் போன்ற பகுதிகளில் 39 / 40° செல்சியஸ் அளவிற்கு பகல் நேர அதிக பட்ச வெப்ப நிலை நிலவக்கூடும் .