அனல் காற்று, இடி முழக்கம், மழை – சென்னையில் ஓர் நாள்

இந்த ஆண்டு அக்னி நக்ஷத்திரம் ஞாயிறு அன்று முடிந்த நிலையில் நேற்று சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் தீவிரமாக இருந்தது.  வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோரா புயல் காரணமாக வலுபெற்றுள்ள மேற்கில் இருந்து வீசும் தரைக்காற்று அனலை பகல் பொழுது முழுவதும் வீசியது.

பகல் 12:00 மணி அளவில் இருந்து மாலை 4:00 மணி வரை வெப்பநிலை 40° செல்சியஸ் அளவை ஒட்டியே நிலவியது.  கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் வெப்ப நிலை 41° செல்சியஸ் அளவை தாண்டியே இருந்து வந்தது.  மேலைக்கற்று மிக வலுவாக இருந்ததால் கடலில் இருந்து வரக்கூடிய ஈரபத காற்று கரையை தாண்ட முடியாமல் இருந்தது. மாலை 4:00 மணிக்கு மேல் வட சென்னை பகுதியில் ஊடுருவிய கடற்காற்று செங்குன்றம் மற்றும் பொன்னேரி பகுதிகளில் மழை மேகங்கள் உருவாக ஏதுவான சலனத்தை உருவாக்கியது.

இந்த மழை மேகங்கள் தென்கிழக்கு திசையில் நகர்ந்து சென்னையில் பல இடங்களில் மழை கொடுத்தது சூட்டை தனித்தது. குறிப்பாக செங்குன்றத்தில் 15 மிமீ மற்றும் மயிலாப்பூரில் 24 மிமீ மழை அளவு பதிவாகியது.

இன்றும் வானிலை படிவங்கள் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள வட தமிழக கடலோர பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் என கணிக்கின்றன. மேலை தரைக்காற்று இன்றும் பலமாக இருக்ககூடும் என்பதால் பகல் பொழுதில் அனல்காற்று வீசக்கூடும். சென்னை நகர் பகுதியில் வெப்பநிலை 40 / 41° செல்சியஸ் அளவை ஒட்டி இருக்கக்கூடும் புறநகர் பகுதிகளில் ஓரிரு டிகிரி அதிகரித்து காணப்படும். நேற்று போல் சென்னைக்கு வடக்கே கடற்காற்று ஊடுருவல் காரணமாக சலனம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  இது மழை மேகங்களை உருவாக்குமா என பார்க்க வேண்டும்.