கேரளாவில் தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியது

உலக அளவில் எதிர்பார்க்கப்படும் ஓர் வானிலை நிகழ்வு இந்தியாவில் தென்மேற்கு பருவக்காற்றின் துவக்கம் என நாம் கூறினால் அது மிகையாகாது. ஒவ்வோர் ஆண்டும் வானிலை ஆர்வலர்கள் வானிலை படிவங்களை பல நாட்களுக்கு முன்பே இந்த ஆண்டின் தென்மேற்கு பருவக்காற்று எப்போது துவங்கக்கூடும் என ஆராய துவங்குவார்கள்.  நேற்று இந்திய வானிலை துறை தென் கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று துவங்கி உள்ளதாக அறிவித்துள்ளனர்.

வங்கக்கடலில் ஏற்பட்ட மோரா புயல் இந்த ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று வழக்கமான தேதியான ஜூன் 1ஆம் தேதிக்கும் இரு தினங்கள் முன்பே துவங்க ஓர் முக்கிய காரணியாகும்.  இந்த புயல் காரணமாக இந்திய துனைகண்டத்தில் மேலைக்காற்று வலுப்பெற்று பருவ மழை உருவாக ஏதுவான வானிலையை உருவாக்கியது.  இந்த வலுபெற்ற மேலைக்காற்றே சென்னையின் வெப்பநிலை கடந்த இரு திங்கங்கலாக அதிகரித்து காணப்பட்ட காரணமாகும்.

இன்று கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் பருவக்காற்று காரணமாக ஓர் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று வெப்ப நிலை கடந்த இரு தினங்களாக இருந்தது போல் அல்லாமல் சற்று குறைந்து காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 40° செல்சியஸ் அளவை ஒட்டி நிலவக்கூடும். மேலைக்காற்று இன்றும் காலை நேரங்களில் சற்று அதிகரித்து காணப்படும் முற்பகல் கடற்காற்று வீசக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.