உட்புற தமிழகத்தின் சில இடங்களில் மழை வாய்ப்பு

தென்மேற்கு பருவ மழை காலம் துவங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக இன்று வெப்ப நிலை சற்று குறைந்து காணப்படும்.  நேற்று சென்னையின் இரு வானிலை மையங்களும் 40° செல்சியஸ் அளவிற்கு கீழே பதிவானது.  மாலை நேரம் கடற்காற்று சற்றே பலம் பெற்று இருந்தததால் வெப்ப நிலை சற்றே மிதமான நிலையில் இருந்தது

இன்றும் வானிலை படிவங்கள் தமிழகத்தில் பரவலாக பகல் நேர வெப்ப நிலை சராசரி அளவை ஒட்டி இருக்கக்கூடும் என கணிக்கின்றன.  குறிப்பாக வட கடலோர பகுதிகளில் கடற்காற்று முற்பகல் ஊடுருவக்கூடும் என்பதால் வெப்ப நிலை குறைந்து காண வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவ மழை மேற்கு கடலோர பகுதிகளில் பரவலாக நல்ல மழையை கடந்த சில தினங்களாக கொடுத்து வருகிறது.  தெற்கு கொண்கன் முதல் கேரளா கரையை ஒட்டி நிலவி வரும் அகடு (தாழ்வு நிலை) காரணமாக இன்றும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  தெற்கு கர்நாடகா மற்றும் கேரளாவில் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ய உள்ளது. காவிரி மற்றும் கபினி நீர்பிடிப்பு பகுதிகளான வயநாடு மற்றும் குடகு மலை பகுதிகளில் பரவலான மழை பெய்யக்கூடும்.

இன்று தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் சில பகுதிகளில் மாலை நேர வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக சேலம், ஈரோடு, வேலூர், தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் இந்த மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன.    டெல்டா மாவட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  சென்னையை பொறுத்தவரை மழை வாய்ப்பு குறைந்து காணப்படும்