திருச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று மாலை இடி மழை

நேற்று தமிழகத்தில் பரவலாக வெப்ப நிலை சற்று குறைந்து காணப்பட்டது.  குறிப்பாக வட கடலோர பகுதிகளில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு பின் குறைந்த வெப்ப நிலை பதிவானது.  சென்னை மீனம்பாக்கம் மே 13ஆம் தேதிக்கு பின் முதல் முறையாக 100° பாரன்ஹீட் அளவிற்கு கீழ் பதிவானது.

மாலை திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் சில இடங்களில் நல்ல மழை பதிவானது.  குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் கொள்ளிட ஆற்றின் கரை அருகே உள்ள மணச்சநல்லூர் பகுதியில் 8 செமீ அளவிற்கு மழை அங்கு உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக தானியங்கி வானிலை மையத்தில் பதிவானது. இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளகுறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

இன்று தமிழகத்தில் பகல் நேர வெப்ப நிலை வழக்கத்தை ஒட்டியே பரவலாக இருக்ககூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  வட கடலோர தமிழக பகுதிகளில் ஒரு சில இடங்களில் வழக்கத்தை விட ஓரிரு டிகிரி கூடுதலாக இருக்கக்கூடும்.  சென்னை போன்ற பகுதிகளில் கடற்காற்று மதியம் 12:00 மணி அளவில் ஊடுருவக்கூடும்.

மழையை பொறுத்தவரை மேற்கு கடலோர பகுதிகளில் பருவ மழை கேரளா மற்றும் தெற்கு கர்நாடக கடலோர பகுதிகளில் நல்ல மழை இன்றும் கொடுக்ககூடும்.  தமிழகத்தின் மத்திய மற்றும் வடக்கு உட்புற பகுதிகளில் இன்றும் மழை வெப்ப சலனம் காரணமாக மழை வாய்ப்பு உள்ளது.