தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று முழுவதும் தொடங்கியது

நேற்று தமிழகத்தில் பரவலாக வெப்ப நிலை குறைந்து நிலவியது. செவ்வாய் அன்று ஏற்பட்ட இடி மேகங்கள் மற்றும் பரவலாக நிலவிய மேக மூட்டமான வானிலை காரணமாக வெப்ப நிலை பல இடங்களில் இயல்பை விட சில டிகிரி குறைந்து பதிவானது. அதிகபட்சமாக திருச்சியில் 37.8° செல்சியஸ் அளவிற்கு பதிவானது. சென்னையின் இரு வானிலை மையங்களும் 33 டிகிரி அளவை ஒட்டியே பதிவானது.


இன்றும் தென் இந்தியாவில் பரவலாக மேகமூட்டாமான வானிலை நிலவக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. இதன் காரணமாக வட தமிழகத்தில் பரவலாக வெப்ப நிலை இயல்பை விட குறைந்து காண வாய்ப்பு உள்ளது. தென் தமிழத்தில் ஒரு சில இடங்களில் வழக்கத்தை விட வெப்ப நிலை ஓரிரு டிகிரி அதிகரித்து காணப்படும்.


தென்மேற்கு பருவக்காற்று தமிழகத்தில் முழுவதும் தொடங்கி உள்ளது. நேற்று இந்திய வானிலை துறை இதை அறிவித்தது. நேற்றைய நிலைப்படி தமிழகம் மற்றும் கேரளாவில் முழுவதும் பருவக்காற்று துவங்கியது, இதே போல் ராயலசீமா தென் பகுதியில் மற்றும் தென் கர்நாடகாவின் சில பகுதிகளிலும் பருவக்காற்று துவங்கியது. தற்போதைய நிலைப்படி பருவக்காற்று வழக்கத்தை விட ஓரிரு தினங்கள் தாமதமாக துவங்கி வருகிறது.


மழையை பொறுத்தவரை இன்று கடலோர ஆந்திர பகுதியில் பரவலாக நல்ல மழை பெய்யக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. இதே போல் தெலுங்கானாவில் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மாலை நேரம் மழை பெய்யக்கூடும் பலத்த கோடை மழை பெய்ய வாய்ப்பு சற்று குறைவே.