தமிழகத்தில் பரவலாக மேகமூட்டமான வானிலை காணப்படும்

கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் மேகமூட்டமான வானிலை நிலவி வருகிறது.  இதன் காரணமாக பரவலாக வெப்ப நிலை இயல்பை விட சற்று குறைந்து காணப்பட்டு வருகிறது.  நேற்றும் தமிழகத்தில் எந்த வானிலை மையமும் 40° செல்சியஸ் அளவை எட்டவில்லை.  அதிகபட்சமாக பாளையம்கோட்டை (திருநெல்வேலி) 39.5° செல்சியஸ் அளவை எட்டியது.

தென்மேற்கு பருவக்காற்று நேற்று கோவா மாநிலத்தை அடைந்தது.  இந்த ஆண்டு கேரளாவை அடைந்த பின் தென்மேற்கு பருவக்காற்று சற்று தொய்வை அடைந்துள்ளது என்பதில் மாற்று கருத்து எதுவும் இல்லை.  எனினும் அடுத்த ஓரிரு தினங்களில் மும்பை மாநகரை தென்மேற்கு பருவக்காற்று அடைய வாய்ப்பு உள்ளது.  வங்காள விரிகுடா பகுதியில் மோரா புயல் காரணமாக வடகிழக்கு மாநிலங்ககளை அடைந்த பருவக்காற்று பின் தொய்வு பெற்றுள்ளது.  தற்பொழுது ஓடிஸா கரையருகே உள்ள மேலடுக்கு காற்று சுழற்சி வலுப்பெற்று பருவக்காற்று மேலும் பரவ வரும் நாட்களில் வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் இன்றும் பரவலாக மேகமூட்டமான வானிலை நிலவக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  இதன் காரணமாக கடந்த இரு தினங்கள் போல இன்றும் பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட குறைந்து காணப்படும்.  மேகமூட்டமான வானிலை நிலவக்கூடும் என்பதால் தரையில் இருந்து வெப்பம் காரணமாக மேல் எழும்பும் காற்று சலனம் ஏற்படுத்த வாய்ப்பு குறைகிறது. இதனால் இடி மழை மேகங்கள் உருவாகாமல் மழை பெய்யும் வாய்ப்பும் குறைந்து காணப்படும்.

மேற்கு கடலோர பகுதிகளில் இன்றும் தெற்கு கொண்கன் முதல் வடக்கு கேரளாவிற்கு இடப்பட்ட கடலோர பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  இதே போல் மத்திய மற்றும் வடக்கு ஆந்திர கரையோர பகுதிகள் இன்றும் மழை பெற வாய்ப்பு உள்ளது.  தமிழகத்தை பொறுத்தவரை பரவலாக வறண்ட வானிலை காணப்படும் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது