தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் – மேற்கு கடலோர பகுதிகளில் பலத்த மழை வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று கேரள கரையை இரண்டு வாரங்களுக்கு முன்பு  அடைந்த நிலையில் சற்று தொய்வு அடைந்து கடந்த சில தினங்களாக காணப்பட்டு வந்தது.  இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியை காரணமாக தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைய ஓர் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஓடிஸா கரை அருகே நிலை கொண்டுள்ள இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியை தென் இந்திய தீபகற்ப பகுதியில் காற்றின் ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஈர்ப்பு காரணமாக அடுத்த சில தினங்களில் தென்மேற்கு பருவக்காற்று மேலும் வடக்கு பகுதிகளில் நகர்ந்து மத்திய இந்திய பகுதிகளில் துவங்கக்கூடும்.

வளிமண்டலத்தில் நிலவி வரும் அதிக ஈரப்பதம் மற்றும் மேகமூட்டமான வானிலை காரணமாக இன்று தமிழகத்தில் பரவலாக வெப்ப நிலை இயல்பை விட குறைந்து காண வாய்ப்பு உள்ளது.  மேலும் மேற்கில் இருந்து வரும் தரைக்காற்று பலமாக வீச வாய்ப்பு உள்ளது, ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள் அது போன்று இன்று பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக பாலக்காடு கணவாய்க்கு கிழக்கு பகுதியில் மணிக்கு 30 கிமீ வரை தரைக்காற்று இருக்கக்கூடும்.

மேல் கூறியதுபோல் இன்று மேற்கு கடலோர பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்யக்கூடும்.  குறிப்பாக கடலோர கர்நாடகா மற்றும் வடக்கு கேரளாவின் சில பகுதிகளில் பலத்த மழை பல இடங்களில் இருக்க வாய்ப்பு உள்ளது.  இதே போல் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மாவட்டம் மாற்றுக் கோவை மாவட்டத்தில் வால்பாறை பகுதிகளில் சில இடங்களில் நல்ல மழை பெய்யக்கூடும்.  வடக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மாலை நேர சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது