தமிழகத்தில் பரவலாக வறண்ட வானிலை நீடிப்பு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக ஏற்படும் மழை குறைந்து வறண்ட வானிலையே நீடித்து வருகிறது.  சில தினங்களாக தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் மேலைக்காற்று மிக வேகமாக வீசி வருவதே இதற்கு ஓர் காரணமாகும்.

நேற்றைய நிலைப்படி தென்மேற்கு பருவக்காற்று கொல்கத்தா, மற்றும் மும்பை மாநகர்களை அடைந்து உள்ளது.  மேற்கு இந்திய பகுதிகளில் குஜராத் கரையை அடைந்து உள்ள பருவக்காற்று கிழக்கு இந்திய பகுதிகளில் இன்னும் தொய்வாகவே உள்ளது.  அடுத்த சில தினங்களில் நல்ல முன்னேற்றம் எதும்  ஏற்பட வாய்ப்பு குறைவே என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தை பொறுத்த வரை இன்று பரவலாக வறண்ட வானிலையே காண வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் சாரல் மழை இருக்க வாய்ப்பு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒரு சில இடங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் சென்னை போன்ற பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாவே நீடிக்கும்.  மேலைக்காற்று வேகமாக உள்ளதால் கடற்காற்று தரையில் ஊடுருவ இயலாமல் போகிறது.

அடுத்த ஓரிரு தினங்களுக்கு இந்த நிலை நீடிக்கும் எனினும் வியாழன் அன்று காற்றின் சலனம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன இதன் காரணமாக வட தமிழக பகுதிகளில் மழை வாய்ப்பு மீண்டும் ஏற்படக்கூடும்.