தெற்கு கடலோர தமிழக பகுதிகளில் இன்றும் மழை வாய்ப்பு

நேற்று இரண்டாம் நாளாக சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்தது.  இதே போல் விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை பகுதிகளிலும் மழை பதிவானது.  புதுக்கோட்டை மாவட்டம் அன்னாவாசல் மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் 3 செமீ அளவிற்கு மழை பதிவானது.  பெரிய நகரங்களில் அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை நகரங்களில் 1 செமீ அளவிற்கு மழை பதிவானது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று துவக்கம் முதலே சற்று விட்டு விட்டே படர்ந்து வருகிறது.  சராசரி துவக்க தேதிகளை நம் நோக்கினோம் எனில் தற்பொழுது தென்மேற்கு பருவக்காற்று உத்திர பிரதேசம், ராஜாஸ்தான், மத்திய பிரதேசம் வரை அடைந்து இருக்கவேண்டும்.  ஆனால் தற்போதிய நிலை கிட்டத்தட்ட 5 – 7 நாட்கள் வரை தாமதமாக துவங்கி வருகிறது.  கேரளா கரையை அடைந்த பொழுது இயல்பை விட இரு தினங்கள் முன்பே வந்து விட்ட போதிலும் பிறகு பரவலாக தொய்வை சந்தித்து வருகிறது. தற்பொழுது ஆந்திர மற்றும் ஓடிஸா கரை அருகே உருவாகி உள்ள புதிய குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி பருவக்காற்றிற்கு ஓர் புதிய எழுச்சி கொடுக்ககூடும் என எதிர்பார்க்கலாம்.

இன்று தமிழக வானிலையை பொறுத்த வரை வட தமிழகத்தில் சற்றே மேகமூட்டமான வானிலை இருக்கக்கூடும்.  பகல் நேர வெப்ப நிலை சென்னை போன்ற பகுதிகளில் இயல்பை ஒட்டியே இருக்ககூடும்.  இன்றும் தென் தமிழகத்தில் மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஆந்திர கரையோர பகுதி மற்றும் அதன் ஒட்டிய ஓடிஸா, சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானாவில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் பலத்த மழை பெய்ய கூடும்.சென்னையை பொறுத்த வரை புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது