தொய்வடைந்த நிலையில் தொடரும் தென்மேற்கு பருவக்காற்று

கடந்த மே மாதம் 30ஆம் தேதி கேரள கரையை அடைந்த தென்மேற்கு பருவக்காற்று கடந்த மூன்று வாரங்களாக விட்டு விட்டே முன்னேறி வருகிறது. ஜூன் 11 முதல் நேற்று வரை மேற்கு கரையோர பகுதியில் மகாராஷ்டிரா / குஜராத் எல்லை அருகில் பருவக்காற்று நிலை கொண்டுள்ளது.  இதேபோல் கிட்டத்தட்ட 10 நாட்கள் வங்கதேச எல்லை அருகே நிலை கொண்ட பருவக்காற்று கிழக்கு இந்திய பகுதியில் நேற்று வரை பீகார் மற்றும் ஜார்கண்ட் எல்லை வரையே அடைந்துள்ளது

தென் இந்தியாவில் பருவக்காற்று துவங்கி உள்ள போதும் மழை போதிய அளவு பெய்யாமலே உள்ளது.  கேரளாவில் எந்த ஒரு மாவட்டமும் நேற்றையை நிலைப்படி சராசரி அளவை எட்டவில்லை. தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று அதிகம் பாதிக்கும் மாவட்டம் கன்னியாகுமரி ஆகும்.  இங்கு நேற்றைய நிலைப்படி சராசரி அளவை விட இந்த ஆண்டு மழை அளவு 50 விழுக்காடு அளவிற்கும் குறைந்தே பதிவாகியுள்ளது. இதே போல் நீலகிரி மாவட்டமும் சராசரி அளவை விட குறைந்தே பெற்று உள்ளது.

தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமான காவேரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள் அனைத்திலும் சராசரி அளவை விட மழை அளவு குறைந்தே பதிவாகி உள்ளது என்பதை மேல் உள்ள வரைபடம் நன்கு எடுத்துரைக்கும். தென் தமிழகத்தின் முக்கிய ஆறுகளான வைகை மற்றும் தாமிரபரணியும் இதே நிலையை எதிர்கொண்டுள்ளது. தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவின் அணைத்து அணைகளும் வரலாறு காணாத வறண்ட நிலையை சந்தித்து உள்ள இந்த ஆண்டு தென்மேற்கு பருவக்காற்றும் தற்பொழுது வரை கைகொடுக்காமல் உள்ளது என்பதே உண்மை.

இன்று தென் இந்தியாவின் உட்புற பகுதிகளில் காற்றின் நிலையற்ற தன்மை காரணமாக இடி மேகங்கள் உருவாகக்கூடும்.  ராயலசீமா, தெற்கு கர்நாடகா பகுதிகளில் வடக்கில் இருந்து வரும் உலர்ந்த காற்றும் மேற்கில் இருந்து அரபிக்கடல் பகுதியில் இருந்து வரும் ஈரமான காற்றும் குவியக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  இது மாலை பொழுதில் இடி மேகங்கள் உருவாக ஏதுவான வானிலையை ஏற்படுத்தும்.  இந்த இடி மேகங்கள் மேற்கில் இருந்து கிழக்காக நகர்ந்து வட தமிழக கரையோர பகுதியை அடையும் பொழுது சென்னை போன்ற பகுதிகளுக்கு மழை ஏற்பட வாய்ப்பு உள்ளது.