வட தமிழகத்தில் மழை வாய்ப்பு, தென் தமிழகத்தில் வெப்பம்

இன்று காலை சென்னை மற்றும் அதனை ஒட்டிய வடக்கு / வடமேற்கு புறநகர் பகுதிகளில் சில இடங்களில் நல்ல மழை பெய்தது.  செங்குன்றத்தில் 16  மிமீ அளவும் புழலில் 14 மிமீ அளவும் மழை பதிவானது.  இதே போல் மீஞ்சூர் பகுதியில் 8 மிமீ அளவிற்கு மழை பெய்தது.  சென்னை நகரில் பெரம்பூர், அண்ணா நகர், கீழ்பாக்கம் போன்ற பகுதிகளில் ஓரளவுக்கு மழை பெய்தது

இன்று தமிழகத்தை பொறுத்த வரை வானிலை இரு துருவங்களாக நிலவ வாய்ப்பு உள்ளது.  வானிலை படிவங்கள் தென் தமிழகத்தில் பரவலாக வெப்பத்தின் தாக்கம் இருக்கக்கூடும் என கணிக்கின்றன.  இயல்பை விட திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் 3 – 5° செல்சியஸ் அளவிற்கு பகல் நேர வெப்ப நிலை அதிகரித்து காணப்படும். வட தமிழகத்தில் இயல்பை ஒட்டியே வெப்ப நிலை இருக்கக்கூடும். சில இடங்களில் இயல்பை விட சற்று குறைந்து காண வாய்ப்பு உள்ளது.

நேற்று போல் இன்றும் வளிமண்டலத்தில் காற்றின் குவியல் காரணமாக நிலையற்ற தன்மை நிலவ வாய்ப்பு உள்ளது.  ராயலசீமா மற்றும் கர்நாடகாவின் உட்புற பகுதிகளில் இந்த நிலையற்ற தன்மை காரணமாக இடி மேகங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. இது தென்மேற்கு பருவகாலம் என்பதால் மேற்கில் இருந்து கிழக்கில் நகர்ந்து கடலை அடையும்.  இந்த நேரத்தில் கடலோர பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்படுகிறது.  இன்று வட தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மாலை மற்றும் பின் இரவு நேரத்தில் இவ்வாறு  மழை பெய்யக்கூடும் என வானிலை படிவங்கள் எதிர்பார்கின்றன.