தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை வாய்ப்பு

நேற்று தமிழகத்தில் விழுப்புரம், கடலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பதிவானது.  ஏனைய பகுதிகளில்  மேகமூட்டமாக இருந்த போதிலும் மழை இல்லாமல் இருந்தது.  திங்கள் அன்று வட தமிழகத்தில் பெய்த பரவலான மழை காரணமாக நேற்றை நிலைப்படி தென்மேற்கு பருவ காலத்தின் மழை பதிவு தமிழகத்தில் இயல்பை விட 0.5 மிமீ அளவிற்கே குறைந்து இருக்கிறது.  தென்மேற்கு பருவ மழை அதிகம் பெய்யும் மாவட்டங்களான கன்னியாகுமரி மற்றும் நீலகிரி பகுதிகளில் மழை இன்னும் அதிகம் இல்லாத பொழுதும் தமிழ்நாட்டின் மழை அளவு இயல்பை ஒட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது

வானிலை படிவங்கள் இன்றும் தென் தமிழத்தில் பரவலாக வெப்ப நிலை சராசரி அளவை விட சற்றே உயர்ந்து காணப்படும் என கணிக்கின்றன.  பரவலாக இன்று சற்றே தெளிந்த வானம் காரணமாக தமிழகத்தில் பகல் நேர வெப்பத்தில் கடந்த சில தினங்களை விட சற்றே உயர்வை எதிர்பார்க்கலாம், திருநெல்வேலி / விருதுநகர் ஆகிய பகுதிகளில் பகல் நேர வெப்பம் 39 / 40 ° செல்சியஸ் அளவை ஒட்டி இருக்ககூடும் என வானிலை படிவங்கள் எதிர் பார்க்கின்றன

மழையை பொறுத்த வரை இன்றும் ஓரிரு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக இடி மேகங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது, எனினும் படிப்படியாக தமிழகத்தில் மழை குறையக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  மேற்கு கடலோர பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை சற்றே மீண்டு எழக்கூடும் என்பதால் தமிழகத்தில் மழை அளவு குறையக்கூடும்.

பொதுவாக மேற்கு கடலோர பகுதிகளில் பருவ மழை தொய்வு நிலையில் இருக்கும் சமயங்களில் தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக பெய்ய கூடிய மழை வாய்ப்பு அதிகரிக்கின்றது. தென் தமிழகத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை பகுதிகளில் இன்று சில இடங்களில் இடி மேகம் உறவாக வாய்ப்பு உள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் எனினும் மழை அளவு இன்றும் சற்று குறைந்தே காணப்படும்