தமிழகத்தில் பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்து காண வாய்ப்பு

நேற்று தமிழகத்தில் சில இடங்களில் மாலை வெப்ப சலனம் காரணமாக இடி மேகங்கள் உருவாகின.  தென் தமிழகத்தில் மதுரை, புதுகோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இதே போல் கடற்காற்று ஊடுருவல் காரணமாக தென் சென்னை பகுதியில் ஒரு சில இடங்களில் திடீரென்று மழை மேகங்கள் உருவாகி மிதமான மழை பெய்தது.  அண்ணா பல்கலைகழக பகுதியில் 11 மிமீ அளவிற்கு மழை பதிவானது.  சென்னையின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் மழை ஏதும் பெய்யவில்லை

இன்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் குறிப்பாக தென் தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  இதே போல் கடலோர பகுதிகளில் டெல்டா மாவட்டம் மற்றும் வட தமிழகத்தின் சில இடங்களில் கடற்காற்று ஊடுருவல் காரணமாக சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் இன்று பரவலாக வெப்ப நிலை இயல்பை விட சற்று உயர்ந்தே காணப்படும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன குறிப்பாக திருநெல்வேலி / விருதுநகர் ஆகிய பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை அதிகமாக காணப்படும்.  சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை இயல்பை ஒட்டி அல்லது சற்று குறைந்த காண வாய்ப்பு உள்ளது