தென்மேற்கு பருவமழை தீவிரம் – கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மழை வாய்ப்பு

கடந்த ஆண்டின் ஏமாற்றத்திற்கு பிறகு ரோல்ஸ் ராய்ஸ் கார் போல் இந்த ஆண்டு பருவ மழை இருக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இது வரை சரி செய்யாத ஸ்டாண்டர்ட் கார் போல் இருந்து வருகிறது. தட்டு தடுமாறி. கடந்த மூன்று வாரங்களாக நிலவி வரும் இந்த ஆண்டின் பருவ மழை முதன்முறையாக மேற்கு கரையோர பகுதிகளில் பரவலாக தீவிரம் அடையும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

நேற்று தமிழகத்தில் சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னையின் தெற்கு பகுதிகள் மற்றும் தாம்பரம் போன்ற புறநகர் பகுதிகளில் முன்னிரவு நேரத்தில் உட்புற பகுதியில் இருந்து வந்த இடி மேகங்கள் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழை பதிவானது.

அடுத்த சில தினங்களுக்கு தென்மேற்கு பருவ மழை மேற்கு கரையோர பகுதிகளில் தீவிர நிலையில் இருக்கும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. தெற்கு குஜராத் முதல் கேரளா வரை கரை அருகே நீடித்து வரும் அகடு காரணமாகவும் வங்க கடல் பகுதியில் உருவாகி வரும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் பருவ மழை தீவிரம் அடைய ஏதுவான சூழ்நிலை உருவாகி உள்ளது.

பருவ மழை தீவிரம் அடைவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்ய கூடும். ஒரு சில இடங்களில் பலத்த மழை வாய்ப்பு உள்ளது. இதே போல் நீலகிரி மாவட்டத்திலும் மேற்கு விளிம்பு பகுதிகள் பலத்த மழையை சந்திக்ககூடும். வயநாடு பகுதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும் என வானிலை படிவங்கள் கணிப்பது கபினி அணையின் நீர் வரத்து அதிகமடைய ஏதுவான நிலையை ஏற்படுத்தும். இதே போல் வால்பாறை போன்ற பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கலாம்

மேலைக்காற்று தீவிரம் அடைவதால் தமிழகத்தின் சென்னை போன்ற கிழக்கு கரையோர பகுதிகளில் இடி மேகங்கள் உருவாக வாய்ப்பு குறைந்து விடும் இன்று மேகமூட்டமான வானிலை மற்றும் பலமான மேலைக்காற்று காரணமாக கடற்காற்று ஊடுருவ வாய்ப்பு குறைவே இதுவும் இடி மேகங்கள் உருவாக நிலையற்ற தன்மை இல்லாமல் செய்து விடும்.