தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து தீவிரம் – வெப்பசலனம் காரணமாக ஏற்படும் மழை குறைந்து விடும்

தென்மேற்கு பருவ மழை மேற்கு கரையோர பகுதிகளில் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் பரவலாக நல்ல மழை பதிவானது.  இதே போல் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஆங்காங்கே நல்ல மழை பெய்தது.  இன்றும் மேற்கு கரையோர பகுதிகளில் பரவலாக நல்ல மழையும் பல இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள நன்கமைந்த குறைந்த காற்று தாழ்வு பகுதி காரணமாக பருவக்காற்றில் ஓர் வீரியம் ஏற்பட்டுள்ளது.  மேலும் குஜராத் அருகே நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சியும் பருவமழை பெய்யும் வகையில் காற்றின் போக்கை சரியாக அமைத்து கொடுத்து வருகிறது.  அடுத்த ஒரு சில நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை எதிர்பார்க்கலாம். இது அணைகளின் நீர் மட்டம் உயர ஓர் நல்ல உந்துதலை கொடுக்கும்.

இன்றும் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக நல்ல மழையை எதிர்பார்க்கலாம். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய உட்புற பகுதிகளில் சில இடங்களில் சாரல் மழை வாய்ப்பு உள்ளது.

நேற்று தமிழத்தின் ஏனைய பகுதிகளில் மழை குறைந்து காணப்பட்டது.  வட சென்னையின் சில பகுதிகளில் சற்றே மிதமான மழை ஓரிரு இடங்களில் பதிவானது.  பரவலாக அடுத்த சில தினங்களுக்கு கடலோர தமிழக பகுதிகளில் மழை வாய்ப்பு சற்று குறைந்து காணப்படும்.  வெப்ப சலனம் காரணமாக ஏற்படும் இடி மேகங்கள் பருவ மழை குறைவாகவே உருவாகும்.