கன்னியாகுமரி, நீலகிரி, வால்பாறை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம், இன்றும் பரவலாக மழை வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களாக தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் மழை குறைந்து விட்ட போதிலும் கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. ஞாயிறு அன்று தேனி மாவட்டம் பெரியார் அணை பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளுக்கு மனதில் ஓர் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.

நேற்று நீலகிரி மாவட்டம் கூடலூர் / உதகை பகுதிகளில்  நல்ல மழை பெய்தது.  இதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது.  இதே போல் கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில பகுதிகளில்  நல்ல மழை பெய்தது.

இன்றும் இதே பகுதிகளில் பரவலாக மழை தொடர வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை வாய்ப்பு உள்ளது.  மேற்கு கடலோர பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக உள்ளதால் காவேரி மற்றும் கபினி ஆறுகளில் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது மனதிற்கு ஆறுதல் தரக்கூடிய ஓர் செய்தியாகும்.

வளிமண்டலத்தின் மேலடுக்குகளில் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து இருக்கும் நிலையில் தமிழகத்தில் பரவலாக இன்று பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை சற்று குறைந்து காணப்படும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  இதே போல் மேற்கில் இருந்து வரும் தரைக்காற்று அதிகரித்து காணப்படுவதால் கடற்காற்று ஊடுருவ வாய்புகள் குறைவே. இதனால் கடலோர பகுதிகளில் சலனம் காரணமாக ஏற்படும் மழை வாய்ப்பு குறைந்து காணப்படும்