தமிழகத்தில் பரவலாக வறண்ட வானிலை வாய்ப்பு

கடந்த சில தினங்களாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தீவிரமாக இருந்த பருவ மழை நேற்று சற்று குறைந்து காணப்பட்டது.  வால்பாறை / சின்னகல்லார் ஆகிய இடங்களில் கடந்த நான்கு தினங்களில் கிட்டத்தட்ட 40 செ.மீ. அளவிற்கு மழை பதிவானது.  இதே போல் நீலகிரி மாவட்டம் தேவளா மற்றும் கூடலூர் பகுதிகளிலும் நல்ல மழை இருந்தது.

குஜராத் அருகே உறவாகி உள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியை காரணமாக பருவ மழை மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதிகளில் தீவிரம் அடைந்த நிலையில் இருக்கும்.  தென் இந்திய தீபகற்பத்தின் தெற்கு பகுதிகளில் பருவ மழை சற்று தொய்வான நிலையில் காணப்படும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  இதன் காரணமாக கேரளா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதிகளில் கடந்த சில தினங்களை விட மழை குறைந்து காணப்படும்.  தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் இதே போன்ற நிலை நீடிக்கக்கூடும் என வானிலை படிவங்கள் எதிர் பார்க்கின்றன.

பருவ மழை சற்று பலம் குறைந்து உள்ளதால் தமிழகத்தில் பரவலாக தெளிந்த வானிலை காணப்படும் இதன் காரணமாக பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட சற்று உயர்ந்து காண வாய்ப்பு உள்ளது. சென்னை போன்ற கடலோர பகுதிகளில் மாலை நேரத்தில் மிதமான கடற்காற்று ஊடுருவ வாய்ப்பு உள்ளது