தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை இன்றும் தொடர வாய்ப்பு

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக பகல் நேர வெப்ப நிலை உயர்ந்தே காணப்பட்டு வருகிறது.  சில இடங்களில் மாலை நேரம் வெப்ப சலனம் காரணமாக இடி மேகங்கள் உருவாகி மழையும் பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 8 இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு எட்டியது.  திருவண்ணாமலை, வேலூர் விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள வேளாண் பல்கலை தானியங்கி வானிலை மையத்தில் 20மிமீ அளவிற்கு மழை பதிவானது.

கணினி படிவங்கள் இன்றும் தமிழகத்தில் வெப்ப நிலை இயல்பை விட 2 / 3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரித்து காண வாய்ப்பு உள்ளதாக கணிக்கின்றன. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 3 / 4 டிகிரி வரை உயர்ந்து காணப்படும். எனினும் மேலைக்காற்று சற்று பலம் குறைந்துள்ளதால் பிற்பகல் வேளையில் கடற்காற்று ஊடுருவ ஏதுவான சூழ்நிலை உருவாகக்கூடும்.

வானிலை படிவங்கள் அடுத்த சில தினங்களுக்கு பருவ மழை தென் இந்தியாவில் தொய்வு அடைந்த நிலையில் இருக்ககூடும் என எதிர் பார்க்கின்றன.  இதன் காரணமாக மேற்கு கடலோர பகுதிகளில் மழை சற்று குறைந்து விடும்.  பருவ மழை வட இந்தியாவின் இமாலய மலையை ஒட்டிய சமவெளி பகுதியில் நிலை கொண்டிருக்ககூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  இந்த சமயங்களில் சாதரணமாக தமிழகத்தில் இடி மேகங்கள் உருவாக அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.

இன்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. சென்னைக்கு மழை வாய்ப்பு மாலை நிலவும் காற்றின் போக்கும், சற்றே உட்புற பகுதிகளில் எங்கு இடி மேகங்கள் உருவாகின்ற என்பதை பொருத்து அமையும்.