தமிழகத்தில் பல இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை தொடரும் வாய்ப்பு

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதே போல் தமிழகத்தில் பரவலாக பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட உயர்ந்தே காணப்பட்டு வருகிறது.  நேற்றும் இதற்கு விதிவிலக்கு அல்ல, கடலோர தமிழகத்தில் சென்னை முதல் டெல்டா மாவட்டங்கள் வரை பல இடங்களில் மழை பெய்தது இதே போல் வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்தே காணப்பட்டது.

நேற்று சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 5 செ.மீ. அளவிற்கு மழை பதிவானது.  இதே போல் மேலும் சில இடங்களில் நல்ல மழை பதிவான போதிலும் நுங்கம்பாக்கம் போன்ற மத்திய நகரப்பகுதியில் மழை குறைந்தே காணப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் மாலை நேரம் பரவலாக நல்ல மழை பதிவானது.

இன்று வெப்ப நிலையை பொறுத்தவரை வட தமிழகத்தில் சற்றே மேக மூட்டமான வானிலை காரணமாக குறைந்து காணப்படும், தென் தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இயல்பை விட அதிகரித்து காணப்படும் தென் மேற்கு பருவக்காற்று மீண்டும் சற்று பலம் பெரும் வரை தென் தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரித்தே காண வாய்ப்பு உள்ளது.

இன்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளது.  வட தமிழகத்தை பொறுத்த வரை புதுவை போன்ற பகுதிகளில் மழை பெய்யக்கூடும். எனினும் பல முறை உட்புற பகுதிகளில் உருவாகம் இடி மேகங்களே கடலோர பகுதிகளில் மழை கொடுப்பதால் உட்புற பகுதிகளில் உருவாகும் இடத்தை பொருத்து கடலோர பகுதிகளில் பெய்ய கூடிய மழை நிலை மாறுகிறது.

அடுத்த சில தினங்களுக்கு வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை தொடர நல்ல வாய்ப்பு உள்ளதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன