வட தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக இன்று மழை வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களாக தொய்வு அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.  இந்த இரு நிகழ்விற்கும் இடையே ஓர் நெருங்கிய சம்பந்தம் உள்ளது.  எப்போதெல்லாம் பருவமழையில் தொய்வு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தின் உட்புற மற்றும் கடலோர பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக ஏற்படும் மழை அதிகரிக்கும்.  மேலை காற்று வேகம் குறைவதே இதற்கு ஓர் முக்கிய காரணி என நாம் கொள்ளாலாம்.

மேலை காற்று பலம் இல்லாத பொது தமிழகத்தின் கரையோர பகுதிகளில் ஈரப்பதத்துடன் வரும் கடற்காற்று ஊடுருவ ஏதுவான சூழ்நிலை ஏற்படுகிறது.  இந்த ஊடுருவல் கீழை மற்றும் மேலைக்காற்று சந்திப்பில் ஏற்படும் சலனம் இடிமேகங்கள் உருவாகக்கூடிய ஏதுவான சூழலை ஏற்படுத்துகிறது.  இதே போல் கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மேற்கில் இருந்து வரும் காற்றை மேல் உயர்த்தி சலனத்தை அதிகரிக்கிறது. பருவ மழை பலம் பெற்றுள்ள நிலையில் மேலைக்காற்று அதிக வேகத்தில் வீசுவதால் இடிமேகங்கள் உருவாக வாய்ப்பு குறைகிறது.

இன்று வட தமிழக பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் புதுவை பகுதிகளில் மாலை பொழுதில் மழை பெய்யக்கூடும்.  தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு உட்புற கர்நாடகா பகுதியில் மதிய பொழுதில் இடி மேகங்கள் உருவாகக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன இந்த இடிமேகங்கள் கடலோர பகுதியை நோக்கி வரும் பொழுது கடற்காற்று ஊடுருவல் காரணமாக மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.