வட தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக இன்று மழை வாய்ப்பு

கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவ மழை தொய்வு அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஏற்படும் மழை தினமும் ஆங்காங்கே பெய்து வருகிறது. ஞாயிறு அன்று சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது.  நேற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மாலை நேரத்தில் மழை பெய்தது.

இன்றும் வட தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக பல இடங்களில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  குறிப்பாக புதுவை முதல் சூளுர்பேட்டை வரையிலான கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் சற்றே பலத்த இடி மேகங்கள் மழை தரக்கூடும்.

மாலை நேரம் உட்புற பகுதிகளில் பகல் பொழுதில் ஏற்படும் நல்ல வெப்பத்தின் காரணமாக ஏற்படும் சலனம் இந்த இடி மேகங்களை உருவாக்குகின்றன. கரையோர பகுதிகளை அடையும் பொழுது கடற்காற்று இந்த இடி மேகங்களை மேலும் வலு கூட்டுகிறது.  இன்றும் அது போல ஏற்பட ஓர் ஏதுவானசூழ்நிலை இருப்பதாகவே படிவங்கள் எதிர்பார்க்கிறது.

வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, கடலூர் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.  சற்றே மேற்காக கிருஷ்ணகிரி / தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை எதிர்பார்க்கலாம்.