தமிழகத்தில் பரவலாக வறண்ட வானிலை

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பருவ மழை தீவிரமாக நிலவி வந்தது.  இந்நிலையில் தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக ஏற்படும் மழை குறைந்து விட்டது. நேற்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட 2 / 3 டிகிரி அளவுக்கு அதிகரித்து காணப்பட்டது

இன்றும் இதே போன்று பகல் நேர வெப்ப நிலை சற்று அதிகரித்தே காணப்படும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன மேலைக்காற்று பலமாக இருப்பதால் இன்றும் கடற்காற்று ஊடுருவ வாய்ப்பு குறைந்தே இருக்கும்.  இதனால் மாலை வரை வெப்பத்தின் தாக்கம் இருக்ககூடும். கடந்த ஓரிரு தினங்களாக தெளிந்த வானம் இருப்பதும் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்க ஓர் காரணமாகும்.  தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 3 / 4 டிகிரி வரை அதிகரித்து காண வாய்ப்பு உள்ளது.

மழையை பொறுத்த வரை பரவலாக வறண்ட வானிலையே அடுத்த ஓரிரு தினங்களுக்கு நீடிக்கக்கூடும் என்பது வானிலை படிவங்களின் கணிப்பு.  தென்மேற்கு பருவமழையும் சற்றே தொய்வு அடையக்கூடும்.  கடந்த சில தினங்களாக நிலவி வந்த தீவிர நிலை நேற்று முதல் குறைய ஆரம்பித்துவிட்டது. இன்றும் கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளில் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருந்த போதிலும் கன மழை வாய்ப்பு குறைவே.  தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.