தென்மேற்கு பருவ மழை – ஜூலை 24,2017 வரை ஓர் தொகுப்பு

கிட்டத்தட்ட தென்மேற்கு பருவ மழை துவங்கி இரண்டு மாதங்கள் நிறைவுக்கு கூடிய விரைவில் வர இருக்கும் நிலையில் தமிழகத்தில் பருவ மழை இந்த ஆண்டு எவ்வாறு இதுவரை உள்ளது எனபதன் ஓர் தொகுப்பு இது.

ஜூன் 1 முதல் ஜூலை 24 வரையிலான நேரத்தில் தமிழகத்தை பொறுத்த வரை 98.4 மிமீ மழை சராசரியாக பதிவாக வேண்டும். இந்த ஆண்டில் நேற்று வரை 72.3 மிமீ அளவிற்கு மழை பதிவு ஆகியுள்ளது. இது சராசரியை விட 27% குறைவாக உள்ளதால் இந்திய வானிலை துறையின் வகைப்பாடு படி “பற்றாக்குறை நிலை”  ஆகும்.

நேற்று வரை தமிழகத்தில் 14 மாவட்டங்கள் சராசரி அல்லது மிகுதி மழை பெற்றுள்ளது.  18 மாவட்டங்கள் பற்றாக்குறை மழை பெற்றுள்ளது.  குறிப்பாக தென்மேற்கு பருவ மழை அதிகம் பெய்யும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சராசரி அளவை விட முறையே 31% மற்றும் 40% குறைவான மழை பெய்து உள்ளது.

இதே போல் கடலோர மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டத்தை தவிர ஏனைய அணைத்து மாவட்டங்களிலும் சராசரி அளவிற்கு அல்லது அதற்கும் மிகுதியாக மழை பதிவு ஆகியுள்ளது, இது வெப்ப சலனம் காரணமாக நல்ல மழை பெய்து உள்ளதை காட்டுகிறது.  நாம் பல முறை எடுத்து உரைப்பது போல் பருவ மழை தொய்வு அடைந்த நிலையிலேயே வெப்ப சலனம் காரணமாக ஏற்படும் மழை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது