தென் மற்றும் உட்புற தமிழக பகுதிகளில் மழை வாய்ப்பு

கடந்த வாரம் அநேக நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படுகிறது. வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மாலை நேரங்களில் அவ்வப்பொழுது மழை பெய்தது. இந்த மழை பரவலாக பெய்யாமல் ஓரிரு இடங்களில் மாத்திரம் பெய்தது.
இந்த நிலை தற்பொழுது மாற வாய்ப்பு உருவாகி உள்ளது. தென் மேற்கு வங்க கடலில் குமரி கடல் ஒட்டிய பகுதியில் மேல் அடுக்கு காற்று சுழற்சி உருவாக கூடும். இது வட மேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடல் பகுதியை அடையக்கூடும். இன்று இரவு அல்லது நாளை காலை இந்த மேல் அடுக்கு காற்று சுழற்சி உருவாக கூடும்.

Weather_map

இந்த மேல் அடுக்கு காற்று சுழற்சி நகரும் பொழுது தென் இந்திய பகுதிகளில் மேல் அடுக்கில் ஏற்படும் காற்று பிளவு கோடு காரணமாக நிலை அற்ற தன்மை உருவாகும்.  இதன் காரணமாக தென் தமிழக மற்றும் உட்புற பகுதிகளில் நாளை முதல் மழை வாய்ப்பு உள்ளது. கடலோர பகுதிகளில் சற்று வாய்ப்பு குறைந்திருந்தும் சில இடங்களில் இரவு நேரங்களில் மழை பெய்ய கூடும். திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் இந்த மழை வலு பெற கூடும்.