தமிழகத்தில் தொடரும் வெப்ப சலன மழை – இன்றும் நல்ல வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது.  வியாழன் அன்று சென்னையின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வெள்ளி அன்று காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பல இடங்களில் நல்ல மழை பதிவானது.

நேற்று தென் தமிழகத்தில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை பதிவானது,  நள்ளிரவு நேரத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவை பகுதியில் சில இடங்களில் பலத்த மழை பதிவானது.

இன்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது. வானிலை படிவங்களை நாம் நோக்கினோம் எனில் நேற்று போல் இன்றும் உட்புற பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கலாம்.  இதே போல் இன்றும் தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம் முதல் புதுவை இடையே உள்ள பகுதிகளில் பரவலாக நல்ல மழையை நாம் எதிர்பார்க்கலாம்.

வட தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் முன்னிரவு நேரத்தில் மழை வாய்ப்பு உள்ளது.  இன்று சென்னைக்கு மேற்கு பகுதிகளில் சற்றே தெளிந்த வானம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளதால் மேல் அடுக்கில் சலனம் ஏற்பட ஏதுவான சூழ்நிலை அமையக்கூடும்.