வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை வாய்ப்பு

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக தென்மேற்கு பருவ மழை தீவிரமாக நிலவி வந்ததது.  இதே போல் மேற்கு கரையோர பகுதிகளில் பருவ மழை வலுப்பெற்று இருந்தது.  கடந்த இரு தினங்களாக மும்பை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த மழை பொழிந்தது.  மத்திய இந்திய பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியை காரணமாக இந்த பலத்த மழை இருந்தது.  நேற்று மாலை முதல் மழை படிப்படியாக குறைய துவங்கி விட்டது. அடுத்த 24 – 48 மணி நேரங்களுக்கு குஜராத் மாநிலத்தில் நல்ல மழை இருக்கும்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் உட்புற மற்றும் கடலோர பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக பெய்து வந்த மழை குறைந்து இருந்தது.  நாம் பல முறை எடுத்துரைத்தது போல் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக நிலவும் காலங்களில் வெப்ப சலனம் காரணமாக ஏற்பாடு மழை குறைந்தே இருக்கும்.

இன்று முதல் படிப்படியாக மேலைக்காற்றின் வீரியம் சற்று குறைய துவங்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  இதன் காரணமாக இடி மேகங்கள் உருவாக மீண்டும் வாய்ப்பு ஏற்படுகிறது.  இதே போல் கடற்காற்று ஊடுருவ கூடிய சூழ்நிலை உருவாகிறது. இதன் காரணமாக மீண்டும் தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது.  இன்று கடலோர பகுதிகளில் சில இடங்களில் மாலை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. படிப்படியாக மழைக்கான வாய்ப்பு அதிகரிக்க உள்ளது. வெள்ளி / சனி முதல் பல இடங்களில் வெப்ப சலனம் காரணமாக ,மழை பெய்யக்கூடும்.