உட்புற தென் இந்தியாவில் தொடரும் மழை – காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரிப்பு

கடந்த ஓரிரு தினங்களாக உட்புற இந்தியாவில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.  குறிப்பாக தெற்கு உட்புற கர்நாடகம், மேற்கு உட்புற தமிழகம் மற்றும் ராயலசீமாவில் சில இடங்களில் கடந்த ஓரிரு தினங்களாக நல்ல மழை பதிவு ஆகியுள்ளது.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.  குறிப்பாக உட்புற பகுதிகளில் நல்ல மழை பதிவாகி உள்ளது. வெள்ளி அன்று கரூர், திருப்பூர், கோவை திண்டுக்கல், மதுரை ஆகிய பகுதிகளில் நல்ல மழை இருந்தது. நேற்று  கோவை, ஈரோடு, நீலகிரி, திருச்சி ஆகிய பகுதிகளில் மழை பதிவானது.  தாராபுரம், கோவை ஆகிய பகுதிகளில் இரண்டு தினங்களாக மழை பெய்து உள்ளது, இன்றும் இவ்விடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

உட்புற பகுதிகளில் பெய்து வரும் நல்ல மழை காரணமாக காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில்  நீர் வரத்து அதிகரித்து வருகிறது.  இது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாகும். கிருஷ்ண ராஜ சாகர் அணை கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு பிறகு 100 அடி அளவை இன்று எட்டக்கூடும். இதே போல் கடந்த மூன்று தினங்களில் மேட்டூர் அணைக்கு 3 டி.எம்.சி.அளவிற்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

உட்புற மாவட்டங்களில் 0.9  கிமீ உயரத்தில் நிலை கொண்டுள்ள  காற்று அகடு காரணமாக ஏறபட்டுள்ள சலனம் இந்த இடி மேகங்கள் உருவாக ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.  இதே போல் குமரிக்கடல் அருகே நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு காற்று அழுத்த தாழ்வு பகுதி மழை பரவலாக பெய்யும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.  இன்றும் காற்றின் சலனம் உட்புற பகுதிகளில் இருப்பதால் மழை வாய்ப்பு நன்கு உள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்யக்கூடும்.

கடலோர பகுதிகளில் மேல் அடுக்கு காற்று கீழை திசையில் இருந்து காற்று இருப்பதால் உட்புற பகுதிகளில் ஏற்படும் இடி மேகங்கள் கடலோர பகுதிக்கு வருவதற்கு வாய்ப்பு குறைந்து விடுகிறது.  இதன் காரணமாக இந்த பகுதிகளில் மழை சற்று குறைந்து காணப்படும்.