தென்மேற்கு பருவ மழை தொகுப்பு (சமவெளி பகுதிகள்) – செப்டம்பர் 7, 2017 வரை

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் சலனம் காரணமாக பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. பாலாறு, நொய்யல் போன்ற ஆறுகளில் பல ஆண்டுகளுக்கு பிறகு நீர் வரத்து அதிகரித்து இருந்ததை நாம் செய்திகளில் பார்த்து வருகிறோம். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை பொய்த்து விட்ட நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை சமவெளி பகுதிகளில் இயல்பை விட அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இந்த ஆண்டு வெப்ப சலனம் காரணமாக அதிக மழை பெய்துள்ளது.  கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பு மாவட்டவாரியான தொகுப்பு அல்ல, இந்திய வானிலை துறை மற்றும் ஏனைய வானிலை மையங்களில் பெய்துள்ள மழை அளவாகும்.

நேற்றைய நிலையின் படி காஞ்சிபுரத்தில் இந்த ஆண்டு ஜூன் 1 முதலான தென்மேற்கு பருவமழை காலத்தில் 100 செ.மீ அளவை எட்டி உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையின் சமவெளி பகுதிகளில் இந்த ஆண்டில் இதுவே அதிகபட்ச மழை அளவு ஆகும்.  காஞ்சிபுரத்தில் ஆண்டுக்கான சராசரி மழை அளவு கிட்டத்தட்ட 110 செ.மீ ஆகும்.  ஆண்டுக்கான மழையை தென்மேற்கு பருவ மழையே கொடுத்துள்ளது இதே போல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் ஆகஸ்ட் மாதம் மட்டும் 62 செ.மீ அளவிற்கு மழை பதிவானது குறிப்பிடதகுந்தது.

சென்னையில் உள்ள இரு இந்திய வானிலை துறை மையங்கள் இடையே உள்ள வான் வழி தூரம் கிட்டத்தட்ட 10 கிமீ மட்டுமே எனினும் இவ்விரு மையங்கள் இடையே மழை அளவில் 16 செ.மீ அளவிற்கு வித்தியாசம் உள்ளது. சலனம் காரணமாக ஏற்படும் மழையில் வெவேறு பகுதியில் மழை தன்மை மாறக்கூடும் என்பதற்கு இது ஓர் நல்ல உதாரணம்