வட தமிழகத்தில் படிப்படியாக மழை குறைய வாய்ப்பு

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக இடி மழை பெய்து வந்தது.  குறிப்பாக உட்புற பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்தது.  குறிப்பட்டு சொல்ல வேண்டுமெனில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் செப்டம்பர் 5 அன்று 24 செ.மீ மழை பதிவானது.  இது இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையில் தமிழகத்தில் பெய்துள்ள அதிகபட்ச 24 மணி நேர மழை அளவு ஆகும்.

கடந்த 30 நாட்கள் மழை நிலவரத்தை நாம் இந்தியா முழுவதும் பார்த்தோமெனில் தென் இந்தியாவின் உட்புற பகுதிகளில் இயல்பை விட அதிகமாக பெய்துள்ள மழை நன்கு தெரிகிறது.  சில பகுதிகளில் இயல்பை விட 25 செ.மீக்கும் மேல் அதிகமாக பெய்துள்ளது.  தென் உட்புற கர்நாடகா, மேற்கு உட்புற தமிழகம் ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வேறுபாடு உள்ளது.  பெங்களூரில் உள்ள இரு இந்திய வானிலை துறை மையங்களும் ஆண்டுக்கான சராசரி மழை அளவை இப்போதே எட்டி உள்ளது.

இந்த இயல்பை விட அதிகமான மழை ஓரளவுக்கு காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்தை அதிகரித்து உள்ளது.  குடகு மற்றும் வயநாடு மாவட்டங்களில் இயல்பை விட குறைந்தே மழை பெய்துள்ள போதிலும் பெங்களூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய பகுதிகளில் பெய்த மழை அணைகளுக்கு நீர் கொடுத்துள்ளது.

கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் கூர்ந்து கவனித்தோம் எனில் வானிலை வடகிழக்கு பருவமழை காலத்தை போல் உள்ளது வளிமண்டலத்தில் காற்று கிழக்கு திசையிலிருந்து வீசி வருகிறது. இதற்கு காரணம் கடந்த சில நாட்காளாக நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சியே காரணம். தற்பொழுது மேலை கரை அருகே நிலை கொண்டுள்ள இந்த சுழற்சி காரணமாக கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  தற்பொழுது தமிழகத்தில் கீழை காற்று வீசுவதால் இடி மேகங்கள் உருவாகும் வாய்ப்பு குறைந்து விட்டது.  அடுத்த ஓரிரு தினங்களுக்கு இதே நிலை நீடிக்கக்கூடும் இதனால் வட கடலோர பகுதிகளில் சலனம் காரணமாக மழை பெய்ய குறைந்த வாய்ப்பே.  சாரல் மழை போன்ற மழை அதிகாலை வேளைகளில் பெய்யக்கூடும். உட்புற பகுதிகளில் ஓரிரு இடங்களில் மாலை நேரத்தில் மழை பெய்யக்கூடும். பரவலாக கடந்த கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக பெய்த பரவலான மழை போல் அல்லாமல் சற்று குறைந்தே காணப்படும்