தென்மேற்கு பருவ மழை தீவிரம், கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு

கிட்டத்தட்ட ஓர் மாதத்திற்கும் மேல் தொய்வு நிலையில் இருந்த தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைய துவங்கி உள்ளது.  நேற்று மேற்கு கரையோர பகுதிகளில் பரவலாக நல்ல மழை பதிவாகியுள்ளது.  இதே போல் தமிழகத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து உள்ளது.

வங்கக்கடல் பகுதியில் தற்பொழுது ஆந்திர கரை அருகே நிலை பெற்றுள்ள் வளிமண்டல மேல் அடுக்கு காற்று சுழற்சி பருவ மழை பலம் பெற ஓர் முக்கிய காரணம்.  இந்த வளிமண்டல சலனம் அடுத்த ஓரிரு நாட்களில் கீழ் இறங்கி குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும்.  அதன் பின் கிழக்கில் இருந்து மேற்கு திசையில் தென் இந்திய தீபகற்ப பகுதி மேல் நகர வாய்ப்பு உள்ளது.  இதன் காரணமாக அடுத்த 7 – 10 நாட்களுக்கு தென்மேற்கு பருவமழை தீவிரமான நிலையில் இருக்கக்கூடும்.  இது கேரளா மற்றும் கடலோர கர்நாடக பகுதியில் நல்ல மழை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இன்று தமிழகத்தை பொறுத்த வரை மத்திய மற்றும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக இடி மேகங்கள் உருவாகக்கூடும்.  தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த மழை எதிர்பார்க்கலாம்.  குறிப்பாக நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும்.