தென்மேற்கு பருவமழை ஓர் தொகுப்பு – 20/9/2017 வரை

இந்திய வானிலை துறை ஜூன் 1 முதல் செப்டம்பர் 3௦ வரையிலான நாட்களை தென்மேற்கு பருவமழை காலமாக கருதுகிறது.  பருவமழை துவங்குவது ஜூன் 1ஆம் தேதிக்கு முன்போ பின்போ இருக்கக்கூடும்   இதே போல் தென்மேற்கு பருவமழை விடை பெறுவதும் ஒரே தேதியில் இருக்காது.  எனினும் புள்ளி விவர சேகரிப்பு காரணமாக இந்த இரு தேதிகள் தென்மேற்கு பருவமழையின் ஆரம்பம் மற்றும் முடிவாக கருதபடுகிறது.  இதே போல் வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை ஆகும்.

நமது வலைபதிப்பில் அவ்வப்போது தென்மேற்கு பருவமழையின் நிலை பற்றி பதிவு செய்து வருகிறோம்.  தற்பொழுது பருவமழை காலம் முடிய இன்னும் 1௦ நாட்களே உள்ள நிலையில்  மாவட்ட வாரியாக இந்த ஆண்டு எவ்வாறு உள்ளது என்பதை பார்ப்போம்

இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை துவங்கியது முதல் கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் பின் தங்கியே இருந்து வந்துள்ளது.  தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் அதிகம் மழை பெரும் மாவட்டங்கள் இவ்விரு மாவட்டங்கள் ஆகும்.  கடந்த வாரம் தென்மேற்கு பருவ மழை சற்று தீவிரமாக இருந்ததால் இந்த இரு மாவட்டங்களிலும் நிலவி வந்த பட்ற்றக்குறை கணிசமாக குறைந்து உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு ஊர்களின் மழை புள்ளி விவரத்தை நாம் நோக்கினோம் எனில் இது நன்கு தெரிந்து விடும்.  குழித்துறை மற்றும் குளச்சல் தவிர ஏனைய அதிக மழை பெய்யும் இடங்கள் செப்டம்பர் மாதத்தில் அதிக மழை பெற்றுள்ளது.  பேச்சிபாறை பகுதியில் செப்டம்பர் மாதத்தில் 20 தினங்களில் 11 தினங்கள் 1 செ.மீ. அளவிற்கும் அதிகமாக மழையை பெற்றுள்ளது.  இதே போல் பெரும்பாலான பகுதிகளில் செப்டம்பர் மாதத்தின் மழை பருவமழையின் மொத்த மழை பதிவில் கிட்டத்தட்ட 50% அளவிற்கு தந்துள்ளது.