வட தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை வாய்ப்பு

கடந்த சில தினங்களாக சற்று தொய்வு நிலையில் இருந்த  இடி மேகங்கள் மீண்டும் துவங்கி உள்ளது.  இன்று உட்புற தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் முற்பகலே இடி மேகங்கள் காரணமாக மழை பெய்து வருகிறது.  இந்த நிலை அடுத்த சில தினங்களுக்கு நீடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவ மழை அடுத்த சில தினங்களில் இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் இருந்து விடை பெறக்கூடும் என இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது. இதே போல் படிப்படியாக தென்மேற்கு பருவ மழை ஏனைய பகுதிகளில் இருந்தும் அடுத்த இரண்டு / மூன்று வாரங்களில் விடை பெற்று விட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கு தென் இந்திய பகுதிகளில் வளிமண்டலத்தில் ஏற்படக்கூடிய சலனம் காரணமாக உட்புற கர்நாடக, ராயலசீமா மற்றும் வடக்கு தமிழக பகுதிகளில் மாலை நேரங்களில் இடி மேகங்கள் உருவாக ஏதுவான சூழ்நிலை நீடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு தினமும் மழை பெய்ய கூடிய சூழல் உருவாகக்கூடும்.

எனினும் தென் தமிழகத்தில் இயல்பை விட குறைந்த அளவே மழை இருக்கக்கூடும், இதே போல் மேற்கு கரையில் கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கூட சராசரி அளவை விட மழை குறைந்து இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.