தென் தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழையில் தொய்வு நிலை நீடிக்கக்கூடும்

தென்மேற்கு பருவ மழை வடமேற்கு இந்திய பகுதிகளில் இருந்து விடை பெற துவங்கி உள்ளது.  நேற்று இந்திய வானிலை துறை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் மற்றும் குஜராத் மாநிலத்தில் கட்ச் பகுதிகளில் இருந்து விடை பெற்று விட்டதாக அறிவித்துள்ளது.  அடுத்த சில தினங்களில் வடமேற்கு இந்தியாவின் ஏனைய பகுதிகளில் இருந்து விடை பெற ஏதுவான சூழ்நிலை உருவாகி உள்ளது.

தென் இந்தியாவை பொறுத்த வரை அடுத்த ஓர் வாரம் / பத்து நாட்களுக்கு உட்புற பகுதிகளில் மழை தொடரக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன குறிப்பாக கர்நாடக மற்றும் ஆந்திர பகுதிகளில் பல இடங்களில் நல்ல மழை பெய்யக்கூடும்.  உட்புற பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலையில் மேட்டூர் அணைக்கு 40000 கண அடிக்கும் மேல் உள்ள நீர் வரத்து கடந்த சில ஆண்டுகளாக பார்க்காத 50000 கண அடி அளவை அடுத்த ஓரிரு தினங்களில் எதிர்பார்க்கலாம்.

ஆந்திர கரை அருகே நீடித்து வரும் மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக தென் இந்தியாவில் மேல் அடுக்கு காற்று சலனம் நிலை பெற்று வருகிறது இதன் காரணமாக இன்று வட தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இடி மேகங்கள் உருவாக ஏதுவான சூழல் உள்ளது. சென்னை போன்ற பகுதிகளில் இன்று முன்னிரவு நேரத்தில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது.

வட தமிழகத்தில் மழை தொடர்ந்து வரும் நிலையில் வானிலை படிவங்கள் தென்தமிழகத்தில் இயல்பை விட மழை குறைந்தே காணப்படும் என கணிக்கின்றன.  தற்பொழுது பெய்யும் மழை பருவ மழை இயக்கவியல் அல்லாமல் காற்று சலனம் காரணமாக இருப்பதால் தென் தமிழகத்தில் மழையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.  அடுத்த சில தினங்களுக்கு இந்த நிலை நீடிக்கக்கூடும், தற்போதைய நிலையில் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய அக்டோபர் மாதம் முதல் பாதி வரை வாய்புகள் குறைவே