சூரியனை பின்தொடரும் பருவ மழை – ஓர் தொகுப்பு

அடுத்த ஓரிரு மாதங்களுக்கு வானிலை அறிக்கைகளில் அதிகமாக உபயோகபடுத்தபடும் வார்த்தை “வடகிழக்குப் பருவ மழை” பலருக்கு வடகிழக்கு பருவ மழை என்பது தமிழகத்தில் கண மழை பெய்ய கூடிய நேரம் என்பது தெரிந்ததே. இன்று நாம் வடகிழக்கு மழை பற்றி ஒரு சிரிய தொகுப்பு பார்ப்போம்.  

இந்தியாவை பொறுத்த வரை மிக முக்கியமான பருவகாலம் தென் மேற்கு பருவ மழை காலம் .  இந்தியாவின் பெரும்பான்மையான உணவு உற்பத்தி தென்மேற்கு பருவ மழையை நம்பியே உள்ளது.

ஆனால் தமிழகம் தென்மேற்கு பருவ மழை பொழுது மழை மறைவு பகுதியாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை காரணமாக மழை மேகங்கள் தமிழகத்திற்கு வருவதில்லை இதன் காரணமாக நாம் மழை மறைவு பகுதியில் இருக்கின்றோம்  இந்த பருவ மழை காலங்கள் எப்படி உருவாகின்றன?

பருவமழையின் முக்கிய காரணம் சூரியனின் நகரவே காரணம்.  சூரியன் கடக ரேகை (Tropic of Cancer) மற்றும் மகர ரேகை (Tropic of Capricorn) இடையே நகர்வதே நாம் அறிந்த உத்தராயணம் மற்றும் தட்சிணாயணம் ஆகும்.   இதுவே நமக்கு பருவ மழை காலம் நிலவ காரணமும் ஆகும்.

சூரியனின் நகர்வு எப்படி தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களை பாதிக்கிறது என்பதை கீழே உள்ள வரைபடத்தில் காணலாம்.  மகர மற்றும் கடக ரேகைக்கு இடைப்பட்ட வெப்ப மண்டல பகுதியில் (Tropics) மழை பெய்ய முக்கிய காரணம் வெப்ப மண்டல காற்று குவிப்பு பகுதி (Inter Tropical Convergence Zone – ITCZ).  இது சூரியனின் நகர்வை சற்றே பின் தொடரும். சூரியன் வட துருவத்தில் இருக்கும் பொழுது  ஆசியாவில் பருவ மழைக்காலம் நிலவுகிறது. சூரியன் தென் துருவத்தில் இருக்கும் பொழுது ஆஸ்திரேலியாவில் பருவ மழை காலம்  நிலவுகிறது.

தென்மேற்கு பருவமழை:  கோடைகாலத்தில் இந்திய துணைகண்டம் கடுமையான  வெப்பம் காரணமாக ஒரு மிக பெரிய காற்று அழுத்த தாழ்வு பகுதியாக மாறுகிறது. இதே நேரத்தில் தென் துருவ பகுதியில் ஆஸ்த்ரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா இடையே மேஸ்கரீன் வலஞ்சுழல் (அதிக காற்று அழுத்தம்) {Mascarene High}உருவாகிறது.  இது இந்திய துனைகண்டத்தில் நிலவும் குறைந்த  காற்று அழுத்தம் நோக்கி காற்றை செலுத்துகிறது. இதுவே இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் ஈரப்பதம் பெற்று தென்மேற்கு பருவ மழையாக மாறுகிறது.

வடகிழக்கு  பருவமழை : இந்த நேரத்தில் சைபீரியா பகுதிகளில் பைகால் பகுதிகளில் அதிகரிக்கும் குளிர் காரணமாக காற்றின் அழுத்தம் அதிகரிக்க தொடங்குகிறது. சைபீரியா வலஞ்சுழல் (Siberian High) உருவாகி ஆசியா முழுவதும் உலர்ந்த குளிர் காற்றை செலுத்த தொடங்குகிறது.

ஏனைய இந்திய பகுதிகளில் குளிர் காலத்தை உருவாக்கும் இந்த காற்று வங்க கடலை தாண்டி வரும் பொழுது ஈரப்பதம் பெற்று வடமேற்கு பருவகாற்றாக மாறுகிறது. இது தென் இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் மட்டும் மழைக்காலம் நிலவ வாய்ப்பு உருவாக்குகிறது.  இதே நேரத்தில் சூரியனை பின்தொடர்ந்து வெப்ப மண்டல காற்று குவிப்பு பகுதி வட இந்தியாவிலிருந்து கீழ் நோக்கி நகர துவங்குகிறது.

இதன் காரணமாகவே சில சமயங்களில் வடகிழக்கு பருவமழையை பின்னோக்கி வரும் பருவமழை காலம் (Retreating Monsoon)  எனவும் அழைக்கபடுகிறது.

இந்த பதிவு 2/10/2015 அன்று முதலில் பதிவு செய்யபட்டது, மீண்டும் சில மாற்றங்களுடன் இன்று மீண்டும் பதிவாகியுள்ளது.