கடலோர தமிழகத்தில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு மழை வாய்ப்பு

கடந்த சில தினங்களாக தென் இந்தியாவின் பல பகுதிகளில் வளிமண்டல சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது,  தமிழகத்தை பொறுத்தவரை வட மாவட்டங்களில் அக்டோபர் மாதம் துவங்கிய முதலே தினமும் மழை பெய்து வருகிறது.  தாம்பரத்திற்கு தெற்கு உள்ள காட்டுப்பாக்கத்தில் கடந்த நான்கு தினங்களாக தினமும் குறைந்த பட்சம் 10 மிமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

தற்போது தென்மேற்கு பருவமழை விடை பெற்று வடகிழக்கு பருவ மழை உருவாக காற்றின் திசை படிப்படியாக மாறி வருகிறது.  இதன் காரணமாக பரவலாக அடுத்த ஓரிரு வாரங்களுக்கு வளிமண்டலத்தில் காற்று சலனம் நிலவி வரும்.  சில சமயங்களில் குவிதல் காரணமாகவும் சில சமயங்களில் எதிர் எதிர் திசையில் காற்று ஏற்படுத்தும்  “காற்று பிளவு கோடு” காரணமாகவும் இடி மேகங்கள் உருவாகி வரும்.

இன்று வளிமண்டலத்தின் கீழ் நிலையில் ஏற்படும் காற்று குவிதல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், வட கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் பின்னிரவு நேரத்தில் கன மழை வாய்ப்பு உள்ளது கடந்த சில தினங்களை நாம் நோக்கினோம் எனில் இன்று இந்த சலனம் சற்றே தெற்காக இருக்ககூடும்.  இதனால் தமிழகத்தில் கடந்த சில தினங்களை விட மழை சற்றே பரவலாக இருக்கும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.