தென்மேற்கு பருவமழை விடைபெருவதில் தொய்வு நிலை

கடந்த சில தினங்களாக தென் இந்தியாவின் பல பகுதிகளில் இடி மேகங்கள் காரணமாக பெய்து வரும் மழை பல இடங்களில் பலன் அளிக்கும்படி நிலத்தடி நீர் நிலையில் முன்னேற்றம் காணும் அளவிற்கு இருந்து வருகிறது.  குறிப்பாக உட்புற தமிழகம், தென் உட்புற கர்நாடக மற்றும் ராயலசீமா பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவே இருந்து வருகிறது. சில இடங்களில் அக்டோபர் மாதம் துவங்கியது முதல் கிட்டதட்ட 15 செ.மீ. அளவிற்கும் மேல் மழை பதிவாகியுள்ளது.  தமிழகம் மற்றும் புதுவை துணை பிரதேசத்தில் நேற்றை நிலைப்படி சராசரி அளவிற்கும் அதிகமாகவே மழை பெய்து உள்ளது.

இந்நிலையில் மத்திய வங்கக்கடல் பகுதியில் ஓர் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி அடுத்த ஓரிரு தினங்களில் உருவாக வாய்ப்பு உள்ளது.  இதன் காரணமாக மத்திய இந்தியா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை விடை பெறுவதில் சற்றே தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியானது மத்திய இந்திய பகுதிகளான சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகமாவே உள்ளது.

இன்று தமிழகத்தின் உட்புற பகுதிகளில் சில இடங்களில் காற்றின் சலனம் காரணமாக இடிமேகங்கள் உருவாகக்கூடும்.  கடலோர பகுதிகளில் காற்றின் திசை சரியாக இல்லாததால் மழைக்கான வாய்ப்பு சற்றே குறைவே. நாளை முதல் சலனம் காரணமாக ஏற்பாடு மழை படிப்படியாக குறையக்கூடும்.