உட்புற தென் இந்தியாவில் நிலவும் வானிலையால் அதிகரிக்கும் மேட்டூர் நீர்வரத்து

கடந்த ஓரிரு வாரங்களாக உட்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டலத்தில் நீடித்து வரும் சலனம் காரணமாக பல பகுதிகளில் தினமும் மழை பெய்வதால் சில பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக தெற்கு உட்புற கர்நாடகா, ராயலசீமாவின் சில பகுதிகள் மற்றும் மேற்கு உட்புற தமிழகத்தில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.

பெங்களூர் போன்ற பகுதிகளில் கிட்டத்தட்ட தினமும் பெய்து வரும் மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் போன்ற நிலை உருவாகி வருவதை நாம் ஊடங்களில் பார்த்தும் படித்தும் வருகிறோம்.  இதே போல் பாலாறு, தென் பெண்ணையாறு போன்ற ஆறுகளும் நீர் வரத்தை பார்த்து வருகிறது.  தென்மேற்கு பருவ மழை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இந்த மழை ஓர் வரமாக அமைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காலங்களில் குடகு, ஹாசன், வயநாடு போன்ற பகுதிகளில் நல்ல மழை இருந்தால் காவேரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும். ஆனால் கடந்த இரு வாரங்களில் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளின் கீழ் மடை நீர்பிடிப்பு பகுதகளில் பெய்த நல்ல மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நல்ல நீர் வரத்து நிலவி வருகிறது.  சாம்ராஜ்நகர், கொள்ளேகால், மைசூரு, மாண்டியா, ராமநகரம், கனகபுரா மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழையே மேட்டூரின் நீர் வரத்திற்கு ஓர் முக்கிய காரணியாகும்.

வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஓரளவிற்கு இந்த பகுதிகளில் மழை பெய்யுமெனில் மேட்டூர் நீர் நிலை கடந்த சில ஆண்டுகளில் ஒப்பிடும்போது நல்ல நிலையில் இருக்கக்கூடும்.  எனினும் தொலைதூர பார்வையில் காவேரி ஆற்றை பொறுத்தவரை நாம் தண்ணீரை கவனமாக உபயோகிப்பதே உசிதம்.