தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு

அக்டோபர் துவங்கியது முதல் தமிழகத்தில் பரவலாக சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.  குறிப்பாக வட தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இயல்பிற்கும் அதிகமாகவே பெய்து வந்துள்ளது.  எனினும் தென் தமிழகத்தில் மழை குறைந்தே காணப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி  ஆகிய மாவட்டங்களில் மட்டுமே கிட்டத்தட்ட தினம் தோறும் ஏதேனும் ஓரிரு இடங்களில் மழை நீடித்து வருகிறது.

காற்றின் திசை இதுவரை தென் தமிழகத்திற்கு எதுவாக இல்லாததாலே இந்த நிலை நீடித்து வந்தது. தற்பொழுது வங்ககடல் பகுதியில் நிலவி வரும் மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக காற்று குவிதல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.  இது வளிமண்டலத்தில் சலனம் ஏற்படுத்தி இடிமேகங்கள் உருவாக ஏதுவான சூழலை உருவாக்குகிறது.

 

நேற்று ராமநாதபுரம் மாவட்டம் கமுதி போன்ற பகுதிகளில் பல தினங்களுக்கு பிறகு மிதமான மழை பெய்தது.  இன்று காலை டெல்டா மாவட்ட பகுதிகளில் சாரல் மழை பல இடங்களில் பெய்து வருகிறது.

இன்று மேல் கூறிய சலனம் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  மதுரை / விருதுநகர்/ திண்டுக்கல் / தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.  இதே போல் மேற்கு தொடர்ச்சி ஒட்டிய மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் சற்றே பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வட உட்புற தமிழகத்தை பொறுத்த வரை இன்றும் மாலை / இரவு நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை தொடர வாய்ப்பு உள்ளது.