வட மேற்கு தமிழக அணைகள் நிரம்ப உதவிய பருவ மழை

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை காலம் எப்போது துவங்கக்கூடும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில் வங்கக்கடலில் தற்பொழுது நீடித்துவரும் மேல் அடுக்கு காற்று சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது.

வானிலை படிவங்கள் இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் அல்லது குரும்புயலாக ஆந்திர / ஓடிஸா கரைபகுதியை தீபாவளியை ஒட்டிய கடக்கக்கூடும் என எதிர்பார்க்கின்றன.

இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 2 / 3 வாரங்களாக வடமேற்கு தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய ராயலசீமா, கர்நாடக உட்புற பகுதிகளில் பெய்து வரும் வரலாறு காணாத மழை குறைந்து விட வாய்ப்பு உள்ளது

 கடந்த வாரம் நமது பதிப்பில் நாம் தெரிவித்தது போல் குடகு மற்றும் வயநாடு பகுதிகளில் மழை இல்லாதபோதிலும் கே.ஆர்.எஸ். அணையின் கீழ் மடை பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நல்ல நீர் வரத்து நீடித்து வந்தது.

இதே போல் பாலாறு மற்றும் பெண்ணையாறு ஆறுகளில் இருக்கும் அணைகளும் உட்புற பகுதிகளில் பெய்து வந்த மழையால் நிரம்பி தற்பொழுது பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த இரு ஆறுகளின் நீர்பிடிப்பு பகுதிகள் பல கிட்டத்தட்ட 35 முதல் 50 செ.மீ. வரை கடந்த 30 நாளில் பதிவாகியுள்ளது. இதில் பெரும்பாலும் கடந்த இரண்டு வாரங்களில் பெய்ததாகும்.

தற்பொழுது உருவாகி வரும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாக உட்புற பகுதிகளில் சலனம் காரணமாக பெய்து வரும் மழை அடுத்த சில தினங்களுக்கு குறைந்து விடும் என்பது பாலாற்றின் கரையோரம் இருக்கும் மக்களுக்கு ஓர் நற்செய்தியாக இருக்கும்.