சென்னையில் தீபாவளி தின புகைமண்டலம் ஏன் – வானிலை காரணி

நமது பெரியோர்கள் ஆண்டாண்டு காலமாக தீபாவளி பண்டிகை பற்றி பேசும்போது அதில் மழை பற்றிய ஓர் குறிப்பு இல்லாமல் இருந்ததே இல்லை.  குறிப்பாக தமிழகத்தில் தீபாவளி பண்டிகையும் வடகிழக்கு பருவமழையும் ஓர் ஒட்டிய உறவு என்று கூறினால் அது மிகையாகாது.  நேற்று சென்னையில் தீபாவளி அன்று வரலாறு காணாத புகை மண்டலம் சூழ்ந்தது.

ஓர் பக்கம் பட்டாசு மற்றும் வான வேடிக்கை காரணமாக நமது நகரங்கள் அதிகமாக மாசுப்பட்டு வருகின்றன என பலர் தெரிவித்து வருகின்றனர். இன்னொரு புறம் தீபாவளி பண்டிகையின் முக்கிய அம்சமே இந்த வான வேடிக்கைகள் தான், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆவலுடன் எதிர்பார்ப்பது பட்டாசு வெடிப்பதை என்று கூறுகின்றனர்.

இப்படி உள்ள நிலையில் நேற்று சென்னையில் நிகழ்ந்த வரலாறு காணாத புகை மண்டலத்தின் காரணம் அளவுக்கு அதிகமாக வெடிக்க பட்ட பட்டாசுகளா அல்லது இதற்கு நாம் ஓர் வானிலை காரணியை தர இயலுமா?

நாம் மேலே கூறியது போல் வடகிழக்கு பருவமழையும் தீபாவளியும் ஓர் ஒட்டிய உறவு என்பதை மேலே உள்ள அட்டவனையை பார்த்தாலே தெரிந்து விடும்.  2010 முதல் தீபாவளி பண்டிகை சென்னையில் வடகிழக்கு பருவ மழை துவங்கியதற்கு பின் வந்துள்ளது, 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் இவ்விரு நிகழ்வுகளும் ஒற்றே நடந்துள்ளது.  நேற்றைய வரலாறு காணாத புகை மண்டலத்திற்கும் வடகிழக்கு பருவமழையின் துவக்கத்திற்கும் ஓர் முக்கிய தொடர்பு உள்ளது.

வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டால் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கீழை காற்று பலம் பெற்று விடும், இந்த சற்றே பலம்பொருந்திய கீழை காற்று காரணமாக வான வேடிக்கைகள் காரணமாக ஏற்படும் புகை பரவ ஏதுவான சூழல் ஏற்பட்டு விடுகிறது. இதே போல் தீபாவளி அன்று பெய்யக்கூடிய மழையும் ஓரளவுக்கு புகையை கட்டுக்குள் இருக்க உதவுகிறது. நேற்று இவ்விரு நிகழ்வுகளும் நடக்கவில்லை.

    இதேபோலே கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னையை ஒட்டிய பகுதிகளில் தீபாவளி தினம்  அன்று மாலையில் தரைக்கு 100 மீட்டர் உயரத்தில் நிலவக்கூடிய காற்றின் வேகத்தை ஆராய்ந்தோமெனில் 2017 தவிர ஏனைய ஆண்டுகளில் காற்றின் வேகம் 15 கி.மீக்கும் அதிகமாக இருந்துள்ளது.  நேற்று வானிலை படிவங்களின் படி சென்னையை ஒட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் 5 கி.மீ அளவிலேயே இருந்துள்ளது.  இதன் காரணமாக வான வேடிக்கைகள் ஏற்படுத்திய புகை எங்கும் நகராமல் ஆங்காங்கே பரவியது.

எனினும் தீபாவளி அன்று வான வேடிக்கைகள் காரணமாக மாசு ஏற்படுவது எவராலும் மறுக்க முடியாத உண்மை.  அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பது வான வேடிக்கைகளுக்கும் பொருந்தும்