வடகிழக்கு பருவ மழை ஏற்பட எதுவாக காற்றின் திசை மாறுகிறது

தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக நல்ல மழை தந்த இந்த ஆண்டின்  தென்மேற்கு பருவ மழைக்காலம் விடை பெரும் வேலை வந்து விட்டது.  ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை கிட்டத்தட்ட அனுதினமும் இடி மேகங்கள் மூலம் உட்புற பகுதிகளில் சராசரி அளவை விட அதிகமாக மழை பதிவானது நாம் அனைவரும் அறிந்ததே.

கடந்த சில தினங்களாக கிழக்கு இந்திய பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது வலு விழந்துவிட்டது.  இதனால் அடுத்த ஓரிரு நாட்களில் மகாராஷ்டிரா, வட கார்ணடகா மற்றும் தெலுங்கானாவில் இன்னும் விடை பெறாமல் இருக்கும் தென்மேற்கு பருவ மழை விடை பெறத் தயாராக உள்ளது.  வானிலை படிவங்களை நாம் நோக்கினோம் எனில் தமிழகத்தில் பரவலாக மேலைக்காற்று நிலவ இன்றே கடைசி தினமாக இருக்கக்கூடும்.

நாளை முதல் வங்கக்கடல் பகுதியில் கீழை காற்று ஊடுருவ ஏதுவான வானிலை நிலவக்கூடும் என படிவங்கள் கூறும் நிலையில் கீழை காற்று இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பிறகே  வலுப்பெற கூடும்.  இந்த வாரத்தின் பிற்பகுதியில் காற்று பலம் பெற்று இரவு / அதிகாலை நேரங்களில் அவ்வபொழுது மழை பெற துவங்க வாய்ப்பு உள்ளது.

தற்பொழுது இருக்கும் வானிலை கூற்றுப்படி இந்த வார இறுதிக்கு முன் வடகிழக்கு பருவமழை காலம் துவங்க ஏதுவான சூழல் உள்ளது.