தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியது

தமிழகம் முழுவதுமே ஆவலாக எதிர்பார்த்திருக்கும் நிலையில் நேற்று இந்திய வானிலை துறை வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அடுத்து வரும் நாட்களில் பருவ மழை தீவிரம் அடைந்து கடந்த ஆண்டை போல் அல்லாமல் இந்த ஆண்டு சராசரி அளவை கொடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு ஆகும்.

தமிழகத்தில் பரவலாக மழை துவங்கவில்லை என்ற போதிலும் பல இடங்களில் மழை பதிவாகி வருகிறது.  நேற்று மேற்கு உட்புற பகுதிகளில் பல இடங்களில் மிதமான மழை பதிவானது. கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல இடங்களில் நல்ல மழை நேற்று இரவு பெய்துள்ளது.  இதே போல் புதுவைக்கு தெற்கே உள்ள கடலோர பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு நாம் பார்த்தோமெனில் டெல்டா மாவட்டங்கள், தென் தமிழக பகுதிகளில் பரவலாக மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  ஒரு சில இடங்களில் மிதமான முதல் சற்றே பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் நல்ல மழை பெய்யக்கூடும்.

மேற்கு உட்புற மாவட்டங்களில் இன்று மழை அளவு சற்று குறைந்தே காண வாய்ப்பு உள்ளது.  வட கடலோர மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும், நாளை முன்னிரவு முதல் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மழை வாய்ப்பு அதிகமாக உள்ளது.