வடகிழக்கு பருவ மழை தீவிரம் – டெல்டா பகுதிகளில் கன மழை வாய்ப்பு

நேற்று முதல் கடலோர தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய துவங்கி உள்ளது.  நேற்று வட கடலோர தமிழகம், டெல்டா மாவட்ட பகுதிகளில் ஆகிய இடங்களில் பரவலாக பலத்த மழை பொழிந்தது.  குறிப்பாக சீர்காழி, பரங்கிப்பேட்டை, கொள்ளிடம், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.  அதிகபட்சமாக சீர்காழியில்  31 செ.மீ அளவிற்கு மழை பதிவானது. சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் பலத்த மழை பதிவானது. 

இந்நிலையில் இலங்கை அருகே நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சி வானிலை படிவங்களில் கூற்றுப்படி அடுத்த சில தினங்களுக்கு அதே இடத்தில நீடிக்கக்கூடும்.  இதன் காரணமாக வடகிழக்கு பருவ மழையில் அடுத்த சில தினங்களுக்கு தொய்வு ஏதும் ஏற்பட வாய்ப்பு குறைவே.  இதனால் கடலோர தமிழக பகுதிகளில் பரவலாக மழை தொடரக்கூடும்.

குறிப்பாக டெல்டா மாவட்ட பகுதிகளில் வானிலை படிவங்கள் இயல்பை விட இரண்டு மடங்கு வரை மிகுதியாக மழை பெய்யக்கூடும் என கணிக்கின்றன.  தற்போது சம்பா சாகுபடி நடந்து வரும் நிலையில் இந்த மிகுதியான மழை காரணமாக வயல் வெளிகளில் நீர் அதிகமாக தேங்கக்கூடும்.  வட கடலோர பகுதிகளிலும் இயல்பிற்கு அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ள போதிலும் தற்போது இருக்கு சூழலில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு குறைவே.  எனினும் அடை மழை தொடர்ந்து பெய்யக்கூடிய சமயங்களில் நீர் ஆங்காங்கே அதிகமாக தேங்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.