கடலோர பகுதிகளில் தொடரும் வடகிழக்கு பருவ மழை

கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவ மழை கடலோர தமிழகத்தில் தீவிரமாக உள்ளது.  பரவலாக டெல்டா மாவட்டம் முதல் சென்னை வரையிலான இடைப்பட்ட பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது.  புதன் அன்று சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கொட்டி தீர்த்தது மழை.  நேற்றும் நகரின் பல பகுதிகளில் பரவலாக பலத்த மழை முன்னிரவு நேரத்தில் பெய்தது.

டெல்டா மாவட்டத்திலும் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.  இலங்கை அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நீடித்து வருவதால் வடகிழக்கு பருவமழை குறையாமல் பெய்யக்கூடிய சூழல் நிலவி வருகிறது.  வானிலை படிவங்கள் இடையே இந்த நிலை மாறுவதற்கான ஒத்து கருத்து ஏதும் ஏற்படாமல் ஓர் நிலையற்ற சூழலையே அடுத்த ஓரிரு நாட்களுக்கு காட்டுகின்றன.

கடந்த இரண்டு தினங்களாக சென்னையை உலுக்கிய மழையை நாம் கவனித்தோம் எனில் வளிமண்டல சலனம் ஓர் முக்கிய காரணியாக இருப்பது அறிந்து கொள்ளலாம்.  குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையை ஒட்டிய பகுதிகளில் காற்று குவிதல் ஏற்பட்டதே பலத்த மழை ஏற்பட ஏதுவான சூழலை உருவாக்கியது.

இன்று தென் தமிழகத்தின் சில பகுதிகளில் இதே போல ஓர் சூழல் ஏற்படக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. இதன் காரணமாக தென் தமிழகத்தில் சில இடங்களில் பலத்த மழை மழை பெய்யக்கூடும்.  ஏனைய கடலோர பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வரும் அவ்வபோது பலத்த மழை பெய்ய வாய்ப்பும் உள்ளது.  இதே போல் உட்புற பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல் மழை ஏதும் பரவலாக பெய்யாத நிலையில் இன்று பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது.